புதிய பாடத்திட்டத்தில் வருமா? செமஸ்டர் முறை! அழுத்தம் தீர்க்க எதிர்பார்ப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 29, 2018

புதிய பாடத்திட்டத்தில் வருமா? செமஸ்டர் முறை! அழுத்தம் தீர்க்க எதிர்பார்ப்பு





பிளஸ் 1 வகுப்பில், பாடத்திட்டத்தில் அதிக பாடங்கள் உள்ளதால், மாணவர்கள் மிரள்வதாகவும், செமஸ்டர் முறைப்படி தேர்வு நடத்தினால், பாடத்திட்ட அழுத்தத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்கலாம் எனவும், கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.


மாநில கல்வி திட்டத்தின் கீழ், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு 'சிலபஸ்' மாற்றப்பட்டது. அடுத்த கல்வியாண்டில், பொதுத்தேர்வு எழுதும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய சிலபஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளது.மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், பல்வேறு தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. உயர்கல்விக்கு தயாராகும் வழிமுறைகளை, இப்பாடத்திட்டம் கற்று கொடுக்கிறது. ஆனால், அதிக பக்கங்கள் கொண்ட புத்தகத்தை கண்டாலே, மாணவர்கள் மிரளுவதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர். கலைப்பிரிவுக்கு மாற பல மாணவர்கள் தயாராகின்றனர்.பாடவேளைகள் பற்றாக்குறையால், ஆசிரியர்களுக்கும் அழுத்தம் ஏற்படுகிறது. நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுக்கும், முதுகலை ஆசிரியர்களே வகுப்பு எடுப்பதால், ஓய்வின்றி தவிக்கின்றனர். இச்சிக்கலுக்கு தீர்வு காண வேண்டியது, கல்வித்துறையின் தலையாய கடமையாகும்.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுசெயலாளர் பிரபாகரன் கூறுகையில், '' மாணவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் இப்பாடத்திட்டத்தில், சில குறைபாடுகள் களையப்பட வேண்டும். அறிவியல் பாடப்பிரிவு புத்தகத்தில், ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் உள்ளன. இதை படித்து, ஆண்டு இறுதித்தேர்வில், 70 மதிப்பெண்களுக்கு எழுதுவது சிரமம்.இது, சிறந்த பாடத்திட்டம். ஆகவே, பாடத்திட்டத்தை சுருக்காமல், செமஸ்டர் முறைப்படி தேர்வு நடத்தினால், மாணவர்கள் ஈடுபாட்டுடன் படிப்பர். ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் இம்முறை மூலம், எளிதில் பரிசோதித்து மேம்படுத்த முடியும்.கற்றலில் பின்தங்கிய மாணவர்கள், முதல் செமஸ்டரில் மதிப்பெண் குறைந்தாலும், அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முயற்சிப்பர். இத்திட்டத்தை கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்தினால், பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post Top Ad