பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Thursday, September 27, 2018

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்


வேலையில் சேரும்போதே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை என்று பள்ளி கல்வி துறை  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை தமிழக அரசு சிறப்பு ஆசிரியர்கள் என்ற அடிப்படையில்  பணி நியமனம் செய்தது.  


இதுபோன்று தமிழகம் முழுவதும் 16,500 ஆசிரியர்கள் உள்ளனர். பணியில்  சேரும்போது ரூ.5 ஆயிரமும், பின்னர் படிப்படியாக  தற்போது ரூ.7,700 சம்பளம்  வழங்கப்படுகிறது. வேலைக்கு சேரும்போதே பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது  என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனாலும்,  இவர்கள் சொந்த ஊர்களுக்கு  பணிமாறுதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாரத்துக்கு 3 நாட்களும்,  அந்த மூன்று நாட்களும் 2 மணி நேரம் மட்டுமே  இவர்கள் பணி செய்வார்கள். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை.  போராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் துறை செயலாளர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தமிழகத்தில் 82 ஆயிரம் ஆசிரியர்கள் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஆசிரியர் தகுதி ேதர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தமிழக அரசு  பள்ளிகளில் காலி பணியிடம் இல்லாததால் காத்திருப்போர் பட்டியலில் அவர்கள் இருக்கிறார்கள்.

இனிமேல் அந்த நிலை இருக்கக்கூடாது என்ற  நிலையில்தான் 2013ல் இருந்த ஆசிரியர்களுக்கும் இப்போது இருக்கும் ஆசிரியர்களுக்கும் வெயிட்டேஜ் என்ற முறையில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.  அதை நாங்கள் வாபஸ் பெற்றிருக்கிறோம். அன்றைய மதிப்பெண் வேறு, இன்றைய மதிப்பெண் வேறு. இதை மாற்றி அமைத்ததற்கு பிறகு அரசு பள்ளிகளில் காலி  பணியிடங்கள் எவ்வளவு என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.

அந்த காலி பணியிடங்களுக்கு ஏற்ப அரசு தேர்வாணையம் மூலம் புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.தமிழகத்தில் 32 மாவட்டங்களில் தலா 50  லட்சம் ரூபாய் செலவில் மாடர்ன் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில், எழும்பூரில் உள்ள பிரின்ஸ் பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் 7  குழந்தைகள் சேர்ந்துள்ளனர். புதிதாக ஆரம்பித்துள்ளோம். அரசின் பணியை பார்த்துக்கொண்டு இன்னும் நிறைய குழந்தைகள் வருவார்கள். இவ்வாறு அவர்  கூறினார்.

Post Top Ad