பள்ளி மாணவர்களிடையே விஞ்ஞானத்தை வளர்க்கும் வகையில் 60 பள்ளிகளில் பரிசோதனைக் கூடம் (லேப்) அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களை உருவாக்கி வருகின்றனர். இதனால், தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
பள்ளி மாணவர்களிடையே விஞ்ஞானத்தை வளர்க்கும் வகையில் தலா ரூ. 20 லட்சம் மதிப்பில் 60 பள்ளிகளில் பரிசோதனைக் கூடம் அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் தொடங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராகப் பதவி வகித்து வந்த உதயசந்திரன் மாற்றப்பட்டது குறித்த கேள்விக்கு அரசுச் செயலாளரை எந்தத் துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் என்றார்.