பிளஸ்-1 தேர்வை புறக்கணிக்கும் தனியார் பள்ளிகள் ?? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 18, 2018

பிளஸ்-1 தேர்வை புறக்கணிக்கும் தனியார் பள்ளிகள் ??


உயர்கல்விக்கு பிளஸ்-1 தேர்வு மார்க் தேவையில்லை என்ற அரசின் முடிவால் பிளஸ்-1 பாட திட்டத்தை தனியார் பள்ளிகள் மீண்டும் கை கழுவும் சூழ்நிலை ஏற்படும் என்று சில ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளன.


பிளஸ்-1 தேர்வை மீண்டும் கை கழுவும் தனியார் பள்ளிகள்

சென்னை:

பிளஸ்-2 முடித்த பிறகு கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் அங்கு முதல் வருட பாடத்திட்டத்தை கையாள்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவு தேர்விலும் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.


பிளஸ்-1 பாட திட்டத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள் நடத்தாமல் புறக்கணித்து விட்டு அதிக தேர்ச்சிக்காக பிளஸ்-2 பாட திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததே காரணம் என தெரிய வந்தது.
அதை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் பிளஸ்-1 தேர்வை பொது தேர்வாக அரசு அறிவித்தது. மேலும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மதிப்பெண்கள் சேர்த்து ஒரே மதிப்பெண் சான்றிதழாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வு அரசு பொது தேர்வாக நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிப்புக்கு தலா 600 மதிப்பெண் வீதம் தனித்தனியாக மார்க் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் உயர்கல்வியில் சேர பிளஸ்-2 மதிப்பெண் மட்டுமே போதுமானது என்றார். தற்போதைய திட்டத்தினால் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதாகவும், பாடங்களை சரிவர படிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

எனவே உயர்கல்வியில் சேர பிளஸ்-2 மதிப்பெண் மட்டுமே போதுமானது என உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

இதற்கு சில ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. அரசின் இத்தகைய முடிவால் பிளஸ்-1 பாட திட்டத்தை தனியார் பள்ளிகள் மீண்டும் கை கழுவும் சூழ்நிலை ஏற்படும்.


அரசு பள்ளிகளை தவிர தனியார் பள்ளிகள் பிளஸ்-1 பாடத்திட்டத்தை விட பிளஸ்-2 பாடத்திட்டத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். ஏனெனில் பிளஸ்-2 தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் காட்டுவதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் எப்போதும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வுக்கு சமமான முக்கியத்துவம் அளித்து வந்தனர். ஆனால் தனியார் பள்ளிகள் பிளஸ்-1 பாடத்தை தவிர்த்து விட்டு பிளஸ்-2 தேர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தனர். இதனால் அரசு பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேரும் நிலை இருந்தது என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.

மேலும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களிலும் சேர்ந்து பயிற்சி பெற்று போட்டி தேர்வுகளில் பங்கேற்கிறார்கள். அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடங்களின் வழியே தான் போட்டி தேர்வுக்கான பயிற்சியை பெற முடியும்.

இந்த சூழ்நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படும் போது மாணவர்களால் நல்ல ஊக்கத்துடன் படிக்க இயலாது என்றும் அவர் கூறினார்.

இருந்த போதிலும் அரசின் தற்போதைய முடிவை தனியார் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர். உயர் கல்வியில் சேர 1200-க்கு பதிலாக 600 மதிப்பெண் சான்றிதழே போதுமானது என்ற அரசின் அறிவிப்பு மாணவர்களின் மனச்சுமையை பெரிதளவு குறைக்கும் என தெரிவித்துள்ளனர்

Post Top Ad