பள்ளிக் கல்வித் துறை சார்பில் கேரளத்துக்கு ரூ.1.62 கோடி நிவாரண உதவி - Asiriyar.Net

Saturday, September 8, 2018

பள்ளிக் கல்வித் துறை சார்பில் கேரளத்துக்கு ரூ.1.62 கோடி நிவாரண உதவி




பள்ளிக் கல்வித் துறை சார்பில் இரண்டாம் கட்டமாக ரூ.1.62 கோடி மதிப்பிலான நிவாரண உதவி பொருள்கள் திருநெல்வேலியில் இருந்து வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
 தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்பேரில், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒவ்வொரு துறை மூலமும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 அதன்படி, ஏற்கெனவே ஈரோட்டில் இருந்து முதல்கட்டமாக பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.


இரண்டாம் கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் அளித்த நிவாரண பொருள்கள் பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருநெல்வேலியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
 ரூ.1 கோடியே 62 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் 22 லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.
 பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாநிலங்களவை உறுப்பினர்கள் எஸ். முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் கே.ஆர்.பி. பிரபாகரன், வசந்தி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post Top Ad