அடுத்து வரவிருக்கும் வடகிழக்குப் பருவ மழை தமிழகத்தை மிரட்டுமா!? ரமணன் சொல்வதைக் கேளுங்கள்! - Asiriyar.Net

Tuesday, August 21, 2018

அடுத்து வரவிருக்கும் வடகிழக்குப் பருவ மழை தமிழகத்தை மிரட்டுமா!? ரமணன் சொல்வதைக் கேளுங்கள்!தென்மேற்குப் பருவமழைக்காலங்களான ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தமிழகத்தின் பெரும்பாலான பிரதேசங்கள் மழை மறைவுப் பகுதிகள் என்பதால் அவற்றுக்குப் பெரிதாகப் பாதிப்புகள் இருப்பதில்லை. தமிழகத்தின் சில பகுதிகள் குறிபிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் நீலகிரியின் மேற்கு நோக்கிய சிகரப் பகுதிகள், தேனி மாட்டத்தின் மழையோரப் பகுதிகள், கேரளத்தை ஒட்டிய கன்யாகுமரி மாவட்டம் போன்ற பகுதிகளில் மட்டும் அப்போது பாதிப்புகள் இருக்கலாம். ஆனால் தமிழகத்துக்கு முற்றிலும் மழை கிடைக்கும் காலமென்றால் அது காற்றின் திசை மாறக்கூடிய வடகிழக்குப் பருவ மழைக்காலத்தின் போது தான். இந்தக் காலகட்டங்களில் கிழக்கிலிருந்து காற்று வீசும். அப்போது வங்கக்கடல் பகுதியிலிருந்து கடல் சார்ந்த நிகழ்வுகளை நாம் எதிர்பார்க்க முடியும். அப்போது நிகழ்வுகள் தப்பவில்லை என்றால் கேரளாவில் நிகழ்ந்ததைப்போன்ற வெள்ளச் சேதங்களை நாமும் எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் நமக்கு உண்டு. ஆனால், அத்தகைய நிகழ்வுகள் முன்னதாக எப்போதெல்லாம் சாத்தியமாகி இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். 2005 ஆம் வருடம் தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இயல்பைக் காட்டிலும் 79% அதிகமாக இருந்தது. அதே போல் 2014 ல் 59% அதிகமாக இருந்தது. இதில் இன்னொன்றையும் நாம் பார்க்க வேண்டும். இங்கே மழைப்பொழிவின் சதவிகிதம் அதிகம் எனும் போது சராசரி மழைப்பொழிவின் அளவு எவ்வளவு என்பதையும் நாம் பார்க்க வேண்டும். கேரளாவில் கடந்த 4 மாதங்களில் கிடைத்த மழைப்பொழிவு 210 செ.மீ. நமக்கு மூன்று மாதத்தில் பெற வேண்டியது 44 செ.மீ தான். அப்படி இருந்தும் நாம் ஏன் பாதிக்கப்படுகிறோம் என்றால்... கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளச் சேதத்தின் முக்கியக் காரணம் வழக்கத்தைக் காட்டிலும் 61% அதிகமாகப் பெய்த மழை நீர் வடிந்து செல்லப் போதுமான வடிகால் வசதிகள் இங்கு இல்லாததால் தான்.
அதோடு கூட இந்த வருடம் வடகிழக்குப் பருவ மழையால் தமிழகத்துக்குப் பாதிப்பு இருக்குமா? இல்லையா? என்பதை நாம் நிகழக்கூடிய எல்நினோக்களை வைத்தும் கணக்கிடலாம். அவற்றால் நேரடிப் பாதிப்பு இல்லையென்ற போதிலும் கடந்த காலங்களில் எல்லாம் எல்நினோ வருடங்களில் தமிழகத்துக்கான மழை வாய்ப்பு இயல்பு அல்லது இயல்பை விட அதிகம் என்ற கணக்கிலேயே இருந்திருக்கிறது. எல்நினோ வருடங்களில் பருவ மழைப்பொழிவு குறைந்திருந்த காலங்களும் கூட வரலாற்றில் உண்டு என்றாலும் சராசரியாகக் கணக்கிடும் போது இயல்பு மற்றும் இயல்பைக் காட்டிலும் அதிக மழைப்பொழிவு இருந்த வருடங்களே அதிகம். எனவே
(எல்நினோ என்பது மத்திய பசிபிக் பெருங்கடலில் தட்பவெப்பநிலை சராசரி தட்ப வெப்பத்தை விட 0.5 டிகிரி அதிகமாக தொடர்ந்து 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்தால் அதை எல்நினோ என்பார்கள். இதே போலா 0.5 டிகிரியை விடக் குறைவாக தொடர்ந்து 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்தால் அதை ழாநினோ என்றும் சொல்வார்கள். இந்த இருவகையான தட்ப வெப்பநிலை மாற்றங்களும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கும் பருவ மழைப் பொழிவில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. எனினும் இயற்கை மாறுதல் அடையும் போதும் கடல்சார் நிகழ்வுகள் சர்வ தேச பெருங்கடல்பகுதிகளில் தப்பி இந்தியக் கடல்பகுதிகளுக்கு குறிப்பாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளுக்கு வரும் போதும் எல்நினோக்களால் நிச்சயம் கணிசமான பாதிப்புகள் வர வாய்ப்புகள் உண்டு.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்று சொல்லவேண்டும். இயற்கையை நம்மால் ஒருபோதும் மிகச்சரியாக அனுமானிக்கவோ, கணிக்கவோ முடியாது
‘எக்ஸ்பெக்ட் தி அன் எக்ஸ்பெக்டட்’ அது தான் இயற்கை.
என்கிறார் முன்னாள் சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன்.
உண்மையில் நாம் செய்திருக்க வேண்டியது என்ன? 2015 ஆம் ஆண்டு கனமழைச் சேதத்தின் பின் இன்று வரையிலுமாக நமக்கு முழுதாக 3 வருடங்கள் கிட்டியிருந்தன. கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு இல்லையென்ற போதும் பெய்த ஒரு சில நாட்கள் கனமழையிலே கூட சென்னையும், திருநெல்வேலியும் அதைச் சமாளிக்க முடியாமல் போதிய வடிகால் வசதிகள் இன்றி திணறித்தான் போயிற்று. ஆக, இப்போதிஅய நமது முக்கியமான பிரச்னை அதிக மழைப்பொழிவு என்பதை ஆதரமாகக் கொண்டதில்லை. அப்படியான கனமழை காலத்தில் மழைநீர் வடிந்து செல்ல போதுமான நகர்ப்புறக் கட்டுமானங்கள் இல்லை. வடிகால் வாரிய வசதிகள் இல்லை என்பது தான். இம்முறை சென்னையைப் பொறுத்தவரை ஆறுகள் கடலை அடையும் எல்லைகளான கழிமுகப் பகுதிகளில் இருக்கும் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டிருப்பதாகவும், போதிய வடிகால் வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்களை அரசு இயந்திரம் பரப்பிக் கொண்டிருக்கிறது.
ஆனால்... உண்மை என்னவென்று மழைநாட்களைக் கடக்கும் சென்னைவாசிகளிடம் கேட்டுப் பாருங்கள். இந்த ஆண்டும் வடகிழக்குப் பருவமழை 2015 ஆம் ஆண்டைப் போல இயல்புக்கு அதிகமாக இருந்தால் அதை சமாளிக்கக் கூடிய கட்டமைப்புகள் இன்றும் இங்கில்லை என்பதே நிஜமென்றாகிறது.
இப்போது சொல்லுங்கள் மீண்டுமொரு வடகிழக்குப் பருவ மழை மீறலை தமிழகம் தாங்குமா? குறிப்பாக சென்னை தாங்குமா?
தலைநகருக்கே இந்த நிலை! எனில் தமிழகத்தின் மற்ற பெருநகரங்களைப் பற்றி என்ன சொல்ல?!

Post Top Ad