மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது வாட்ஸ் அப் நிறுவனம் - Asiriyar.Net

Friday, August 24, 2018

மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது வாட்ஸ் அப் நிறுவனம்


வதந்திகளை தடுக்கும் வகையில்,
தொழில்நுட்ப ரீதியான தீர்வை கண்டறிய வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் நிராகரித்தது.

   குறுந்தகவல்களை பகிரப்பயன்படும் சமூக வலைதளங்களில் முதன்மை வகிக்கும் நிறுவனம் வாட்ஸ் அப். சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக வதந்திகள் பரவுவதும், இதன்மூலம், கும்பலாக தாக்குதல் நடத்துவது, வன்முறை பதட்டம் அதிகரிப்பது ஆகியவை அதிகரித்தன. குறிப்பாக வாட்ஸ் அப் மூலமாகவே இத்தகைய வதந்திகள் அதிக அளவு பகிரப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. 
 இதைத் தொடர்ந்து, வதந்திகள் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு இரு முறை நோட்டீஸ் அனுப்பியதற்கு, வாட்ஸ் அப்-பில் தகவல்களை பகிர்வதற்கு கட்டுப்பாடுகள் விதித்து, நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்த நிறுவனம் பதிலளித்தது. உலகம் முழுவதும் 150 கோடி பேர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர். அதில் இந்தியாவில் மட்டும் 20 கோடி பேர் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியா வந்திருந்த வாட்ஸ் அப் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் டேனியலை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சந்தித்தார். அப்போது, வாட்ஸ் அப் பில் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், அவற்றின் ஆரம்பப் புள்ளியை கண்டுபிடிப்பதற்கு தொழில்நுட்பரீதியான தீர்வைக் கண்டறிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் நிராகரித்துள்ளது. வாட்ஸ் அப்பில் தகவல் பரவும் ஆரம்பப் புள்ளியை கண்டுபிடிக்கும் வசதியை ஏற்படுத்தினால், அது வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களின் தனியுரிமை பாதுகாப்பை பாதிக்கும் வகையில் அமையும். அதனால் அந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 இதுகுறித்து வாட்ஸ் அப் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, "தகவல் பரிமாற்றத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வந்தால், அது வாட்ஸ் அப்பின் அடிப்படை கட்டமைப்பான தனியுரிமையை பாதிக்கும். செயலியில் இருக்கும் தனியுரிமை பாதுகாப்பை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை நிறுவனம் ஒருபோதும் மேற்கொள்ளாது" என்று கூறினார்.

Post Top Ad