பள்ளியில் தேசியக் கொடி ஏற்றிய 9-ம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவி - Asiriyar.Net

Wednesday, August 15, 2018

பள்ளியில் தேசியக் கொடி ஏற்றிய 9-ம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவிதிருச்செந்தூர், ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப் பள்ளியில், தேசியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற 9-ம் வகுப்பு மாணவி ஜெயலெட்சுமியைச் சிறப்பு விருந்தினராக அழைத்து தேசியக் கொடியை ஏற்றி ஊக்கப்படுத்தியுள்ளது பள்ளி நிர்வாகம்.


  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பந்தல்மண்டபம் அருகில் உள்ளது ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப்பள்ளி. கடந்த 1895-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளிதான் திருச்செந்தூரிலேயே தொடங்கப்பட்ட முதல் பள்ளியாகும். ஒன்று முதல் எட்டாம்வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில், 225 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். 12 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிந்து வருகிறார்கள்.


   வழக்கமாக பள்ளிகளில் தியாகிகள், தலைவர்கள், பேச்சாளர்கள், தலைமையாசிரியர்கள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து கொடியேற்ற வைத்து சொற்பொழிவு ஆற்ற வைப்பதுதான் வழக்கம்.


  ஆனால், இப் பள்ளியில் ஒவ்வொரு வருடம் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினத்தில் 8-ம் வகுப்பு படித்து முடித்து, தேசியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் அல்லது மாணவியை அழைத்து கொடியேற்ற வைத்து மரியாதை செய்து ஊக்கப்படுத்துகிறது இப்பள்ளி நிர்வாகம்.


  72-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு கடந்த ஆண்டு 8-ம் வகுப்பு படித்து, தேசியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஜெயலெட்சுமி தேசியக் கொடியை ஏற்றினார். பின், மாணவி ஜெயலெட்சுமிக்கு குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் எழுதிய ``இந்தியா 2020” என்ற புத்தம் பரிசாக வழங்கப்பட்டது.


   இது குறித்து பள்ளியின் நிர்வாகிகளிடம் கேட்டப்போது, ``வரும் ஜனவரி 26, குடியரசு தின விழாவில் கொடியேற்ற, மாவட்ட அளவில் தேசியத் திறனாய்வுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி காயத்ரி லெட்சுமியை அழைக்க இருக்கிறோம்.


  சாதனை மாணவர்களை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அழைத்து, மரியாதை செய்து ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களுக்குத் தலைமைப் பண்பு வளர்வதோடு, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நிலைக்கும்” என்றார்.

Post Top Ad