அரசு பள்ளிகளில் ரூ.500 கோடியில் ஸ்மார்ட்கிளாஸ் - தடை கோரி வழக்கு - Asiriyar.Net

Wednesday, August 22, 2018

அரசு பள்ளிகளில் ரூ.500 கோடியில் ஸ்மார்ட்கிளாஸ் - தடை கோரி வழக்கு

மதுரை, திருமால்புரத்தை சேர்ந்த வக்கீல் எர்னஸ்ட் டி பிரகாஷ் லிவிங்ஸ்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களை (ஹைடெக் லேப்) ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக 3,090 உயர்நிலைப்பள்ளிகளிலும், 2,939 மேல்நிலைப்பள்ளிகளிலும் செயல்படுத்த முடிவாகியுள்ளது.  இதேபோல் அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலம் பாடங்களை கற்பிக்கும் வகையில் முதல்கட்டமாக 3 ஆயிரம் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் வகுப்பறை என்ற அடிப்படையில் அறிவுத்திறன் (ஸ்மார்ட்)  வகுப்பறைகள் துவங்கப்பட உள்ளன. 


இந்த இரு திட்டங்களுக்காக மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களை செயல்படுத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது. பெரியளவிலான டெண்டர் பணிகளை பாடநூல் கழகம் இதுவரை கையாண்டதில்லை. இதுபோன்ற டெண்டர் பணிகளை அரசின் எல்காட் மூலமே மேற்கொள்ள வேண்டும். 


குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யும் வகையில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பல தகுதியான நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டெண்டர் அறிவிப்பு அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். இந்த அறிவிப்பு சட்டவிரோதம் எனக்கூறி ரத்து செய்ய வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர், அரசுத் தரப்புக்கு அவகாசம் அளித்து மனு மீதான விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Post Top Ad