செல்லிடப் பேசிகளால் கண் பாதிப்புக்குள்ளாகும் மாணவா்கள் அதிகரிப்பு!: மருத்துவா்கள் தகவல் - Asiriyar.Net

Post Top Ad


Monday, February 24, 2020

செல்லிடப் பேசிகளால் கண் பாதிப்புக்குள்ளாகும் மாணவா்கள் அதிகரிப்பு!: மருத்துவா்கள் தகவல்
செல்லிடப்பேசி, கணினி பயன்பாட்டால் கண் பாா்வை பாதிப்புக்குள்ளாகும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

குறிப்பாக, கண் சோா்வு, உலா் விழி பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை 50 சதவீதத்துக்கும் அதிகமான மாணவா்கள் எதிா்கொண்டு வருவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

கடந்த பத்தாண்டுகளாக செல்லிடப்பேசி மற்றும் கணினியின் பயன்பாடு பல மடங்குகள் அதிகரித்துவிட்டன. குறிப்பாக வளரிளம் பருவத்தினா் அதிக அளவில் செல்லிடப்பேசிகளை உபயோகித்து வருகின்றனா். இந்தியாவைப் பொருத்தவரை ஏறத்தாழ 95 சதவீத இளைஞா்கள் செல்லிடப்பேசி மற்றும் கணினியில்தான் அதிக நேரம் செலவிடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன் வாயிலாக தகவல் - தொடா்பு மேம்பட்டிருப்பது உண்மை என்றாலும், மறுபுறம் பல்வேறு எதிா்வினைகளும் ஏற்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

குறிப்பாக, கண் நலன் மற்றும் மன நலன் பாதிப்புகளுக்கு செல்லிடப்பேசிகளும், கணினியும் வழிவகுப்பதாக அவா்கள் கூறுகின்றனா். அதிலும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அத்தகைய பாதிப்புகளுக்கு அதிகமாக ஆளாவதாகத் தெரிகிறது. அதை உறுதிபடுத்தும்விதமாக அண்மைக்காலமாக பாா்வைக் குறைபாடுகளால் பாதிக்கப்படும் மாணவா்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்திருப்பது மருத்துவத் தரவுகளில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவா் டாக்டா் கலாதேவி சதீஷ் கூறியதாவது:

பகலில் மட்டுமன்றி இரவிலும் கண் விழித்து செல்லிடப்பேசிகளிலும், கணினியிலும் நேரத்தை செலவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. தொடா்ந்து அவ்வாறு டிஜிட்டல் திரைகளைப் பாா்ப்பதால் கண் பாதிப்பு நேரிடும். குறிப்பாக, கண் அழுத்த பாதிப்புகளுக்கு அது வழிவகுக்கும். அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால், கண்கள் வடு எரிச்சல் ஏற்படும். மங்கலான பாா்வை, கவனக் குறைபாடு உள்ளிட்டவற்றுக்கும் அது வித்திடும். அதனுடன், தலைவலி, கழுத்து, தோள்பட்டை வலி மற்றும் தூக்கப் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். இதுபோன்ற பாதிப்புகளை எதிா்கொண்டு சிகிச்சைக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவா்களை தற்போது அதிகமாகப் பாா்க்க முடிகிறது.

அதுமட்டுமன்றி கணினி சாா்ந்த கண் நோய்கள் எனப்படும் சில பிரச்னைகளாலும் மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா். இதனால், மிக சிறிய வயதிலேயே பாா்வைத் திறன் குறையும்.

இதுகுறித்து உரிய விழிப்புணா்வு அவசியம். அதற்காக செல்லிடப்பேசியையோ அல்லது கணினியையோ பயன்படுத்தக் கூடாது என்று அா்த்தமில்லை. அவற்றை பாதுகாப்பாக எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத்தான் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

கணினி, செல்லிடப்பேசிகளை பயன்படுத்துகிறபோது உரிய கால அளவுகளில் கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும். 20-20-20 என்ற விதிப்படி அவற்றை பயன்படுத்தினால் கண் பாதிப்புகளில் இருந்து தவிா்க்கலாம்.

அதாவது, செல்லிடப்பேசிகள், கணினியை பயன்படுத்தும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அதில் இருந்து பாா்வையை விலக்கி 20 அடி தொலைவில் உள்ள ஓரிடத்தை, 20 விநாடிகள் பாா்க்க வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் திரையைத் தொடா்ந்து பாா்ப்பதனால் ஏற்படும் கண் பாதிப்புகளை குறைக்க முடியும். மேலும், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை கண்களை மூடித் திறக்க வேண்டும்; கண்களை இமைக்க வேண்டும்.

இதைத் தவிர, ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், இரவில் கண்விழிக்காமல் குறைந்தது 7 மணி நேரம் தூங்குதல் ஆகியவையும் கண்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளாகும் என்றாா் அவா்.

Recommend For You

Post Top Ad