அரசு பள்ளிகளுக்கு இடியை இறக்கும் மத்திய அரசு!! சரணடையப்போகிறதா தமிழக அரசு? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, February 17, 2020

அரசு பள்ளிகளுக்கு இடியை இறக்கும் மத்திய அரசு!! சரணடையப்போகிறதா தமிழக அரசு?






நாடு முழுவதும் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை நேரடியாக தேர்வு செய்யவேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு தற்போது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

மொத்த தலைமையாசிரியர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதம் இப்படி நேரடியாக தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்றும் அவர்களுக்கு துறைவாரியான தேர்வு நடத்தி பணியில் நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு சொல்கிறது.தங்களது புதிய கல்விக் கொள்கையின் மிக முக்கியமான அம்சம் இது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது..

தமிழகத்தைப் பொறுத்தவரை 24 ஆயிரத்து 321 ஆரம்பப் பள்ளிகளும் 6,966 நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு கல்வியை கற்றுத்தரும்பணியில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர்..

இந்தநிலையில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நேரடியாக தலைமை ஆசிரியர்கள் என்றால், அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்…

தமிழக அரசு ஆரம்பப் பள்ளி கூட்டணியின் பொதுச் செயலாளரான ஆர் தாஸ் சொல்கிறார், ''முதலாவதாக ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அதிகளவில் இருப்பது கிராமப்புறங்களில் தான். இங்கு படிக்கும் மாணவ மாணவியரை கையாளுவது என்பது மிகவும் கடினமான காரியம் அனுபவம் இல்லா விட்டால் பல்வேறு சிக்கல்களை ஆசிரியர்கள் சந்திக்க நேரிடும்.

உதாரணத்திற்கு. குறிப்பிட்ட ஒரு கிராமத்தின் வாழ்வாதாரம் அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள் , அவர் களுடைய பொருளாதார சூழல், உறவு முறைகள், மண்ணுக்கே உண்டான பிரச்சனைகள் போன்றவற்றை உணர்ந்து நன்கு புரிந்து வைத்திருந்தால் மட்டுமே மாணவ மாணவியரை வழிநடத்த முடியும், பிரச்சினைகள் எழுந்தாலோ, மாணவ மாணவியர் சரியாக படிக்கவில்லை என்றாலோ, அவற்றை சரிப்படுத்த அவர்களின் பெற்றோர்களிடம் சுமூகமான அணுகுமுறையை கையாளவும் நன்கு அனுபவம் தேவை.. இப்படி செய்ய அங்கு தொடர்ந்து நீண்டகாலம் பணிபுரியும் ஆசிரியர்களால் மட்டுமே முடியும்.

தேர்வுகள் மூலம் நேரடியாக ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பதவிக்கு வருபவர்களால், கிராமப்புற பள்ளிகளை நிர்வகிப்பது என்பது மிகவும் சிக்கலான காரியம்.. உள்ளூர் மக்களின் மனநிலையைப் புரியாமல் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள்''

இன்னொரு புறம் இப்படி நேரடியாக பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதவி பதவி உயர்வுக்காக கிடைத்திருக்கும் ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாவார்கள் என்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. ஒரு கட்டத்திற்கு மேல் பதவி உயர்வு கிடைக்காது என்று தெரிந்துபோனால், ஆசியர்களிடம் பணியில் ஆர்வம் குறைந்துபோய் சோர்ந்தேபோய்விடுவார்கள்.

மொத்தத்தில் கிராமப்புற பள்ளிகளை அழிக்கும்வேலையைத்தான் பார்க்க ஆரம்பித்துள்ளது மத்திய அரசு என்பதே ஆசிரியர்களின் ஆதங்கமாக உள்ளது.

தேர்வுகள் நடத்தி நேரடியாக பள்ளித்தலைமை ஆசிரியர்கள் நியமனம் என்ற விஷயத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளப்போகிறது இல்லையா என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும்.


-ஏழுமலை வெங்கடேசன்

Post Top Ad