விஜயதசமி தினத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 26, 2018

விஜயதசமி தினத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்




விஜயதசமி தினத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதிகளவில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோன்று இந்த ஆண்டு அரசு, அரசு உதவிபெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் அந்தப் பகுதியினைச் சார்ந்த பெற்றோர் அக்.19 விஜயதசமி தினத்தன்று தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு வரக்கூடும். எனவே, அன்றைய தினம் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
14 வகையான நலத் திட்டங்கள் குறித்து: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் 14 வகை நலத் திட்டங்கள் குறித்து பெற்றோர்கள் அறியும் வகையில் ஊர் பொது இடங்களில் பதாகைகள் வைத்தும், பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் நடத்தியும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தி விஜயதசமி நாளன்று 5 வயதுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோரிடம் அறிவுறுத்த வேண்டும். விஜயதசமி தினத்தில் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர் வருகை புரியும்போது அவர்களை இன்முகத்துடன் வரவேற்று பள்ளிகளில் சேர்ப்பதுடன் அன்றைய தினமே குழந்தைகளுக்கு விலையில்லாப் பாடநூல், சீருடை போன்றவற்றை வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

Post Top Ad