அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, September 20, 2018

அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை!!




அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை!
மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியின் அநேக இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று (செப்டம்பர் 19) செய்தியாளர்களிடம் கூறுகையில், கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதாகத் தெரிவித்தார். “இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை அடுத்து வரும் 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும். இதன் காரணமாக தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று மாலை முதல் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். நாளை காற்றின் வேகம் அதிகரித்து 65 முதல் 75கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இதனால் அந்தமான், தெற்கு வங்கக் கடல் பகுதிக்கு செப்டம்பர் 19 மற்றும் 20ஆம் தேதிகளிலும், செப்டம்பர் 19, 20, 21ஆம் தேதிகளிலும் ஆந்திரா, மத்திய வங்கக் கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் சில முறை மிதமான மழை பெய்யக்கூடும். தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுப்பெற்று, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை நோக்கிச் செல்வதால், தென்தமிழகத்தில் மழை இல்லை” என்று தெரிவித்தார்.

கடந்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் மற்றும் தரமணியில் தலா 5 செ.மீ. மழையும், ஸ்ரீபெரும்புதூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும், மரக்காணம், மதுராந்தகம், செஞ்சி, பூண்டி, பூந்தமல்லி, சோழவரம், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Post Top Ad