நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?
எதிர்மறையாக நினைக்காமல் இருப்பதும், நல்லதே நடக்கும், அனைத்தும் சரியாக நடக்கும் என்று எண்ணங்களை வளர்ப்பதே நேர்மறை எண்ணங்கள் ஆகும்.
இவ்வாறு நடந்து கொள்வது கடினமா?
துவக்கத்தில் இதற்காக உங்களை மாற்றிக்கொள்வது கடினமாக இருக்கும், ஒரு கட்டத்தில் அதுவே பழகி விடும்.
"எப்படி இருக்கீங்க?" என்று யார் கேட்டாலும், "சூப்பரா இருக்கேன் " என்று தான் கூறுவேன்.
இது ஒரு நேர்மறை எண்ணம் என்பதையே நான் அறியாமல் செய்து வந்தேன். முன்பு இதுபோல நேர்மறை எண்ணங்கள் குறித்த பேச்சுகள் பரவலாக இல்லை.
நான் இப்படி இருக்கிறேன் என்பதை உணர்ந்ததே அலுவலக நண்பர் ஒருவர் கூறியபோது தான்.
நீண்ட கால அலுவலக நண்பர், ஸ்கைப் சாட்டில் வந்து "எப்படி இருக்கீங்க கிரி?" என்றார். நான் வழக்கம் போல "சூப்பரா இருக்கேங்க" என்றேன்.
"கிரி கிட்ட எப்ப கேட்டாலும் நல்லா இருக்கேன்னு பதில் சொல்வார். ரொம்ப வருசமா ஒரே மாதிரி இருக்கீங்க! நீங்க இப்படி சொல்வதைக் கேட்டாலே எனக்கு உற்சாகம் ஆகிறது" என்றார். அவர் கூறிய பிறகே நான் அப்படி கூறி வருவது எனக்குத் தெரிந்தது.
இந்தச் சமயத்தில் (2015) நேர்மறை எண்ணங்கள் குறித்த பேச்சுகள் பரவலாகி விட்டது. நான் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த தருணம்.
இடைப்பட்ட காலத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள், நேர்மறை எண்ணங்கள் பற்றிய பரவலான கருத்துகள் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. எனவே, நேர்மறையாகவே சிந்திப்போம் என்று முடிவு செய்தேன்.
ஆனால், நினைப்பது போல அவ்வளவு எளிதாக இல்லை.
காரணம், நம் சமூகம் முழுக்க எதிர்மறை எண்ணங்களை அதிகம் கொண்டுள்ளது. எனவே, எங்கே திரும்பினாலும், படித்தாலும் எதிர்மறை செய்திகளாகவே உள்ளன.
குறிப்பாகச் சமூகத்தளங்கள், ஊடகங்கள் எதிர்மறை எண்ணங்களின் ஊற்றாக உள்ளது.
ஊடகங்களில் நல்ல செய்தியைக் காண்பதே அரிதாக உள்ளது. திறந்தாலே முழுக்க எதிர்மறை செய்திகளே நிரம்பி வழிகின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் எதிர்மறை எண்ணங்கள் உச்சத்தில் உள்ளது. நெறியாளர்கள் எதிர்மறை பேச்சுகளைத் தூண்டுகிறார்கள்.
சீரியல்களில், திரைப்படங்களில், ஃபேஸ்புக், ட்விட்டர் என்று அனைத்துப் பக்கங்களிலும் எதிர்மறை எண்ணங்கள்.
எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
யாராவது எப்படி இருக்கீங்க? என்று கேட்டால், "எதோ இருக்கேன், வண்டி போகுது, சுமாரா இருக்கேன், மோசமா இருக்கு, நேரமே சரியில்லை" என்பது போன்ற எதிர்மறை வார்த்தைகளைக் கூறாதீர்கள்.
"ரொம்ப நல்லா இருக்கேன்" என்று உற்சாகமாகக் கூறுங்கள், இதைப் போலக் கூறுவதால் நீங்கள் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. இவ்வாறு கூறுவதால், கேட்டவரையும் மனதளவில் உற்சாகப்படுத்துகிறீர்கள்.
நடக்காது, கிடைக்காது என்பது போன்ற எதிர்மறை வார்த்தைகளைப் பேசாதீர்கள். நடக்கும் என்று நம்புங்கள். இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
நடக்கவில்லையென்றாலும், இதுவும் நன்மைக்கே என்று நேர்மறையாகக் கருதுங்கள்.
அடுத்தவரிடம் எப்படி நடந்து கொள்ளக் கூடாது?
அடுத்தவரைச் சோர்வடைய செய்யும் கருத்துகளைக் கூறாதீர்கள்.
ஒன்றை கூறுவதால் எந்தப்பயனும் இல்லையென்று கருதினால், அதைக் கூறி அடுத்தவரை வருத்த வேண்டாம்.
அடுத்தவரைத் தேவையற்று மன ரீதியாகப் பயமுறுத்த வேண்டாம்.
எதிரில் இருப்பவரை மன உறுதி இழக்கச்செய்யும் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
அருகில் இருப்பவரின் குறைகளைத் தேடித் தேடி கூற வேண்டாம்.
அடுத்தவர் மனம் நோகும்படியான பேச்சுகளைப் பேசாதீர்கள்.
உடல் / தோற்றம் சார்ந்த குறைகளைச் சுட்டிக்காட்டாதீர்கள்.
பயிற்சியே நம்மை மேம்படுத்தும்
நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என்று பயிற்சி செய்ய ஆரம்பித்த பிறகு தான் எத்தனை எதிர்மறை எண்ணங்களை நாம் கொண்டு இருக்கிறோம் என்றே தெரிய வருகிறது.
கடினமாக இருந்தாலும், தொடர் பயிற்சியில் தோராயமாக 80% வெற்றி பெற்று விட்டேன் என்றே கருதுகிறேன்.
தற்போதெல்லாம், எதிர்மறை செய்திகளைப் படிக்கவோ பார்க்கவோ பிடிப்பதில்லை. அந்தப்பக்கமே செல்வதில்லை.
எதெல்லாம் என்னைக் கோபப்படுத்துகிறதோ, பதட்டம் அடைய வைக்கிறதோ, மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதோ, கவலையை ஏற்படுத்துகிறதோ அவற்றை முற்றிலும் தவிர்த்து விடுவேன்.
நாம் ஏன் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ள வேண்டும்! 🙂
நேர்மறை எண்ணங்களால் நான் அடைந்த பயன்கள்
எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.
யாரையும் பொறாமையாக நினைக்கத் தோன்றாது.
மற்றவர்கள் தவறாகக் கூறினாலும், அவர்களை எளிதாகப் புறக்கணிக்க முடியும்.
மற்றவர்கள் தவறாகப் பேசியதை பற்றி நினைத்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
மனதில் உள்ள வன்மம் குறையும்.
எல்லாமே நல்லதாகவே நடக்கும்.
கெட்டது நடந்தாலும் அதிலும் ஒரு நன்மை இருக்கும்.
யாரையும் எதிரியாகப் பார்க்கத் தோன்றாது.
எதற்கு இவ்வளவு நாட்களாகப் பலரிடம் சண்டை போட்டோம் என்று தோன்றும்.
எதுவுமே பிரச்சனையாகத் தோன்றாது.
எல்லோருமே நல்லவர்களாகத் தெரிவார்கள்.
கோபம் குறைந்திருக்கும் / வராது.
மன அழுத்தம் இருக்காது.
மற்றவர்கள் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள்.
எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்? என்று வியப்பாகக் கேட்பார்கள்.
பிரச்சனைகளே நமக்கு இல்லையா?! என்று சந்தேகம் வரும்.
பதட்டம் இருக்காது.
மனது பாரம் இல்லாமல், பறப்பது போல இருக்கும்.
எதிலும் சிக்காத சுதந்திரத்தை உணர்வீர்கள்.
எதையும் யோசித்து நிதானித்துச் செய்வீர்கள்.
உங்களுக்கு நல்லது நடப்பது அதிகரித்து இருப்பதை உணர்வீர்கள்.
பாருங்க எவ்வளவோ நன்மைகள்!! 🙂 . எதிர்மறை எண்ணங்களால் இவற்றை எல்லாம் வாய்ப்பிருந்தும் இழந்து கொண்டு இருக்கிறீர்கள்.
மேற்கூறியது அனைத்துமே என்னுடைய சொந்த அனுபவம், இதில் எந்தப் பொய்யும் கலப்படமும் இல்லை 🙂 .
சமீப மாற்றம்
சமீபமாக நான் நேர்மறையாகப் பேசுவதை, நடந்து கொள்வதை நண்பர்கள் பலர் அறிந்துள்ளனர். எனவே, நான் எதிர்மறையாகப் பேசுவதை அவர்களே சுட்டிக்காட்டும்போது நாம் இன்னும் சரியாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு வருகிறது.
ஊரில் ஒரு நிகழ்வுக்குச் சென்றபோது அங்குள்ள உறவினர் அக்காக்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது நேர்மறை எண்ணங்கள் குறித்த பேச்சு வந்தது. என்னுடைய அனுபவங்களைக் கூறினேன், அவர்களும் ஆர்வமாகக் கேட்டார்கள்.
இது போலப் பலர் ஆர்வமாகக் கேட்பார்கள் ஆனால், செயல்படுத்த மாட்டார்கள். எனவே, நானும் அதன் பிறகு மறந்து விட்டேன்.
அடுத்த முறை, இன்னும் பலர் இது குறித்துப் பேசினர். ஒரு அக்கா பின்பற்றுவதாகக் கூறினார். கடந்த வாரம் ஒரு நிகழ்வுக்காகக் கோபி சென்று இருந்தபோது கேட்பவர்கள் அதிகரித்து இருந்தனர். பெண்களுக்குள் இது குறித்து விவாதித்து இருக்கலாம் என்று கருதுகிறேன்.
பலரும் இது குறித்து என்னிடம் கேள்வி கேட்டு, ஆர்வமாகப் பேசினார்கள்.
அடுத்த முறை அனைவரையும் பார்க்கும்போது இதன் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம்.
எல்லோருமே எதிர்மறை சிந்தனைகள், மன அழுத்தங்கள், பதட்டங்கள், கோபம் ஆகியவற்றில் இருந்து வெளியே வர விரும்புகிறார்கள்.
காரணம், தற்போதைய வாழ்க்கை முறை அனைவருக்கும் இது போல நெருக்கடியைக் கொடுக்கிறது. எனவே, இதில் விடுபட அனைவரும் விரும்புகிறார்கள்.
எனவே தான், அவர்களைவிட வயது குறைந்து இருந்தாலும் என்னையும் மதித்துக் கேட்கிறார்கள். நான் கூறுவதில் உண்மை இருப்பதாக நம்புகிறார்கள்.
முதலில் இது போல நாம் மாற வேண்டும் என்று நினைப்பதே மிகப்பெரிய மாற்றம். இதன் சூடு குறையாமல் அப்படியே தொடர்ந்தால், பின்பற்றுவது எளிது.
சிறுவர் சிறுமியரிடமும் எதிர்மறை எண்ணங்கள்
சின்னப் பசங்க பொண்ணுங்க கிட்ட கூட எதிர்மறை எண்ணங்கள், பேச்சுகளே நிறைந்துள்ளன. அதற்கு அவர்களது பெற்றோர்களும், பள்ளி சூழ்நிலையும் காரணம்.
பெற்றோர் தான் இது குறித்துப் பேசித் தங்கள் குழந்தைகளிடையே பரவி வரும் எதிர்மறை எண்ணங்களை விலக்க வேண்டும்.
சின்னப் பையன் "எனக்கு டென்ஷனா இருக்கு"ன்னு சொல்றான். என்னங்க கொடுமை!
அதற்கான முழு அர்த்தம் கூட அவனுக்குத் தெரியாது ஆனால், மற்றவர்கள் கூறுவதைப் பார்த்துத் தானும் அவ்வாறு கூற முயல்கிறான். இது மோசமான போக்கு.
எளிதாக அனைத்தையும் "மொக்கை" என்று கூறி விடுகிறார்கள். இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தை. திரைப்படங்கள் சில வார்த்தைகளை எளிதாகக் குழந்தைகளிடம் கொண்டு சென்று விடுகின்றன. அதை விளையாட்டாகப் பேசுகிறார்கள்.
எதிர்மறை எண்ணங்களால் இழப்பு மட்டுமே
எதிர்மறை எண்ணங்களால் நமக்குப் பாதிப்பு மட்டுமே. இதைத் தயவு செய்து உணருங்கள்.
நேர்மறை எண்ணங்களைப் பின்பற்றுவதால், கண் முன்னே பல நன்மைகள், நல்ல செயல்கள் நடக்கும்போது.
ஏன் நீங்கள் மன உளைச்சலை, கவலையை, பதட்டத்தை, சோகத்தை, எரிச்சலை, மன அழுத்தத்தை, பொறாமையை, கெட்டதைத் தரும் எதிர்மறை எண்ணங்களைத் தேடிப்போய்ப் பின்பற்றுகிறீர்கள்.
எல்லோரும் நினைப்பது போல உலகம் மிக மோசமானது அல்ல, சூழ்நிலைகளே அனைத்தையும் தீர்மானிக்கின்றன. பிரச்னை என்று நினைத்தால் எல்லாமே பிரச்சனைகள் தான்.
சில விதிவிலக்குகளைக் காரணம் காட்டி உங்கள் எதிர்மறை எண்ணங்களை நியாயப்படுத்தி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.
உங்கள் கண்ணில் படும் நல்லதை கவனிக்க ஆரம்பித்தால், இதுவரை காணாத நல்ல காட்சிகளும் இதன் பின் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.
கடந்த நான்கு வருடங்களாக என் கண் முன்னே பார்த்து வருவதால், அனுபவித்ததால், உணர்ந்ததால் கூறுகிறேன்.
நேர்மறை எண்ணங்களின் பலம் அபரிமிதமானது. நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும். இது கதையல்ல என் அனுபவ உண்மை.