5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குழந்தைகளுக்கு எதிரான வன்முறை - Asiriyar.Net

Monday, September 23, 2019

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குழந்தைகளுக்கு எதிரான வன்முறை


ஐந்து மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு ஒப்பானது என்றார் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநிலத் தலைவர் மோசஸ்.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையானது குலக்கல்வியை ஆதரிப்பது, கல்வியை வியாபாரமாக்கி தனியாருக்கு லாபம் ஈட்டிக் கொடுப்பது, குழந்தைகள் இடைநிற்றலுக்கு வழிவகுப்பதுமாக உள்ளது. எனவே இந்த கல்விக் கொள்கையானது திரும்பப் பெறப்பட வேண்டும்.


அதிலும் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு ஒப்பானது. தமிழக அரசானது அந்த கல்விக் கொள்கை அம்சங்களை மறைமுகமாக செயல்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
எனவே மாணவர்களின் நலன் கருதி, இந்த கல்விக்கொள்கைக்கு எதிராகவும், அரசுப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையை தடுத்து நிறுத்திடவும் கோரி மாநிலம் முழுவதும் 6 மண்டலங்களாக பிரித்து வேன் பிரசாரத்தை வரும் 25-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளோம். பின்னர் வரும் 29-ஆம் தேதி ஆசிரியர்கள் திரளானோர் பங்கேற்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம்.
1990 களில் 3,000 மெட்ரிக். பள்ளிகள் இருந்தது. ஆனால் தற்போது 18,500 பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுத்தன் நோக்கம் என்ன?.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பினை மேம்படுத்த வேண்டும். அதை விடுத்து 2 ஆசிரியர்களுடைய 18,000 பள்ளிகளை மூட நடவடிக்கை எடுப்பது நியாயமா?. அரசுப் பள்ளிகளில் 10 குழந்தைகளுக்கு கீழ் குழந்தைகள் வர ஆசிரியர்கள் காரணம் கிடையாது. பொதுமக்களை ஆக்கிரமித்த தனியார் பள்ளிகளின் மோகம் தான் காரணம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி திட்டமிட்டு செயல்பட்டால்தான் அரசுப் பள்ளிகளை பாதுகாக்க முடியும் என்றார்.
பேட்டியின்போது, மாநில துணைப் பொதுச் செயலாளர் கணேசன், துணை தலைவர் ரகீம், மாவட்டத் தலைவர் காளிதாஸ், மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Post Top Ad