அரசுப் பள்ளி மாணவியை எதிர்கால கனவை நிறைவேற்ற தன் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த கலெக்டர் - Asiriyar.Net

Wednesday, May 15, 2019

அரசுப் பள்ளி மாணவியை எதிர்கால கனவை நிறைவேற்ற தன் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த கலெக்டர்



கலெக்டராக விரும்பிய மாணவியை வரவழைத்து, தன் இருக்கையில் அமர வைத்து, கரூர் கலெக்டர் அன்பழகன் பாராட்டினார். கடந்த முழு ஆண்டு தேர்வு, ஆறாம் வகுப்பு ஆங்கில கேள்வித்தாளில், எதிர்காலத்தில் யாராக வர ஆசைப்படுகிறீர்கள், உங்கள் முன் மாதிரி யார் என, கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு, கரூர் மாவட்டம், குளித்தலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி, மனோபிரியா, 'கலெக்டர் ஆக விரும்புகிறேன். என் முன் மாதிரி, கரூர் கலெக்டர் அன்பழகன்' என, பதில் எழுதியிருந்தார்.



இந்த தகவலை, பள்ளி ஆசிரியர், பூபதி, கலெக்டரின் மொபைல் எண்ணுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பி இருந்தார். அதை பார்த்த கலெக்டர் அன்பழகன், மனோபிரியாவை அழைத்து வர உத்தரவிட்டார்.இதன்படி, மனோபிரியா உள்ளிட்ட சில மாணவ - மாணவியரை, தலைமையாசிரியர், பூபதி, கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று, அழைத்து வந்தார். 

"எனக்கு கலெக்டர் ஆவதுதான் லட்சியம். அந்த கனவை மனசுல இப்போதிருந்தே கொஞ்சம்கொஞ்சமா விதைச்சுக்கிட்டு இருக்கேன். அதுக்காக, உங்க சீட்டுல ஒருதடவை உட்காரணும். அதுக்கு அனுமதிப்பீங்களா?" என்று அரசுப்பள்ளி மாணவி ஒருவரின் ஆசையை மதித்து, அந்த மாணவியை அழைத்து தனது சீட்டில் அமர வைத்து அழகு பார்த்திருக்கிறார், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பொய்யாமணியில் இருக்கிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியான மனோபிரியா, படிப்பில் படுசுட்டி. எழ்மை குடும்பத்தை தள்ளாடவைத்தாலும், தான் நன்றாகப் படித்து பெரிய இடத்துக்கு வர வேண்டும், அதுவும் மாவட்ட கலெக்டராக வரவேண்டும் என்பதை எதிர்கால
லட்சியமாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்துமுடிந்த ஆண்டுத்தேர்வில், ஆங்கிலத்தேர்வில் கேட்கப்பட்ட, `உங்களின் லட்சியம் என்ன?' என்ற கேள்விக்கு, `எனது லட்சியம், மாவட்ட கலெக்டராவதுதான்' என்று எழுதி இருக்கிறார். அதை திருத்திய பள்ளியின் பட்டதாரி ஆங்கில ஆசிரியர் பூபதி, உள்ளம் பூரித்துப் போனார். உடனே, அந்த மாணவியை அழைத்துப் பாராட்டவும் செய்தார். கூடவே, `கரூர் கலெக்டரைச் சந்திக்கணும். அவரது சீட்டுல ஒருதடவை உட்காரணும். முடியுமா சார்?' என்று தயக்கமாகக் கேட்டுள்ளார். உடனே, மாணவி மனோபிரியாவின் ஆசையை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கவனத்திற்கு வாட்ஸ் அப் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர் பூபதி. அதற்குச் சம்மதித்த ஆட்சியர், இன்று அந்த மாணவியை வரவழைத்து, அந்த மாணவியின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்.

ஆசிரியர் பூபதிஆசிரியர் பூபதி தனது குடும்பத்தோடு சென்றதோடு, மாணவிகள் மனோபிரியா, மது மற்றும் மாணவர்களான மாதவன், தனுஷ், சாரதி ஆகிய ஐந்து பேரையும் அழைத்துப் போனார். மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்ற ஆட்சியர் அன்பழகன், மனோபிரியா எழுதிய, `ஆட்சியராவதுதான் எனது லட்சியம்' என்ற அந்த விடைத்தாளை வாங்கி பார்வையிட்டார். அதன்பிறகு, மாணவி மனோபிரியாவை தனது சீட்டில் அமரவைத்தார். அதில் படபடப்புடன் அமர்ந்த மனோபிரியாவின் கண்களில் மகிழ்ச்சி மத்தாப்பு பொரிந்தது. அதோடு, ``வருங்காலத்தில் ஆட்சியராக வாழ்த்துகள். அதுவும், அரசுப் பள்ளியில படிக்கிற நீ, ஆட்சியராவதை கனவா வச்சுருக்குறது மெச்சத்தகுந்த விசயம். உனக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை, நீ என்ன உயரத்திற்குப் போனாலும் மறக்காதே. ஆசிரியர்களால்தான் நல்ல மனிதனை, சமூகத்தை கட்டமைக்க முடியும். எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆறுமுகம் என்கிற ஆசிரியரால்தான் நான் இந்தநிலைமைக்கு வந்திருக்கிறேன். அவரை மறக்கக் கூடாது என்பதற்காக அவரது பெயரைதான் பாஸ்வேர்டு உள்ளிட்ட பல விசயங்களுக்குப் பயன்படுத்துகிறேன். மறுபடியும் வாழ்த்துகள்" என்று சொல்ல, மனோபிரியா முகமெங்கும் மகிழ்ச்சிப் பிரவாகம்!.

மாணவி மனோபிரியாவிடம் பேசினோம். ``என் குடும்பம் ஏழ்மையான குடும்பம். என் பெற்றோர் எனக்காகக் கூலி வேலைக்குப் போறாங்க. அதனால், `நான் நல்லா படிச்சு, பெரிய நிலைமைக்கு வரணும்'ங்கிற வைராக்கியத்தை நெஞ்சுல விதைச்சுக்கிட்டேன். பூபதி சார், `நீங்க எல்லோரும் சாதாரண வேலைக்குப் போகக் கூடாது. உங்கள்ல ஒருத்தர் மாவட்ட கலெக்டரானாகூட, உங்களுக்கு மட்டுமல்ல, இந்த ஊருக்கே அது பெருமை'னு அடிக்கடி சொல்லுவார். சகாயம் ஐ.ஏ.எஸ், உதயச்சந்திரன்னு கலெக்டர் ரேங்குல உள்ளவங்க பலர் பண்ற நல்ல விசயங்களை அப்பப்ப எங்களுக்கு தெரியப்படுத்துவார்.



அதைப் பார்க்கப் பார்க்க என்னையறியாமல், `ஆனா கலெக்டராதான் ஆவது'னு மனசுல லட்சியத்தை விதைச்சுக்கிட்டேன். அதேபோல், கலெக்டர் சீட்டுல ஒருதடவை உட்காரணும்னு ஆசைப்பட்டேன். பூபதி சார் மூலமா அது நிறைவேறிட்டு. அந்தச் சீட்டுல உட்கார்ந்ததும், இப்பவே எனக்கு கலெக்டரான மாதிரி ஒரு உணர்வு வந்துச்சு. அன்பழகன் சாருக்கு நன்றிகள். கண்டிப்பா நான் கலெக்டராவேன் அண்ணே" என்று உறுதியாகச் சொல்லி முடிக்கிறார்.
கனவு மெய்ப்படட்டும்!.

Post Top Ad