1 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்படவில்லை - தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு !! - Asiriyar.Net

Thursday, May 9, 2019

1 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்படவில்லை - தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு !!
தேர்தல் பணியாற்றிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களால் தபால் வாக்கு செலுத்த முடியாத நிலை இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 50 சதவீதம் பேர் தபால் வாக்குகள் போட முடியவில்லை என புகார் கூறியுள்ளனர். தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, கடந்த மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. அப்போது தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவல்துறையினர், அரசு ஊழியர்கள் ஆகியோர் தபால் வாக்களிப்பது வழக்கம். இந்த முறை,2 லட்சத்து 75 ஆயிரம் பேர் தபால் வாக்குப்பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்தும், பாதி பேர் இன்னும் வாக்களிக்க முடியாத நிலை இருப்பதாக தேர்தல் பணியாற்றிய ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு 4 கட்டமாக பயிற்சிகள் நடைபெற்றன. பொதுவாக தேர்தல் பணியாற்ற உத்தரவு நகல் கொடுக்கும்போதே தபால் வாக்கு விண்ணப்பம் கிடைக்கும். ஆனால் இந்த முறை அதனை முறையாக பின்பற்றவில்லை என்று கூறும் ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுவர்கள் வாக்களிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.தேர்தல் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் தபால் வாக்குகள் செலுத்த மே 22 வரை அவகாசம் இருக்கிறது. எனவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்கள், தபால் வாக்களிக்க முடியாதது தொடர்பான பிரச்னையை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என ஆணையம் எடுக்கும் முயற்சியில் தபால் வாக்குகள் அனைத்தும் பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டியதும் அவசியமாக இருக்கிறது

Post Top Ad