பிளஸ்1 தேர்விலும் கடைசி மாவட்டம் - தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அளிக்க முடிவு - Asiriyar.Net

Thursday, May 9, 2019

பிளஸ்1 தேர்விலும் கடைசி மாவட்டம் - தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அளிக்க முடிவு


பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தொடர்ந்து பிளஸ்1 தேர்விலும் தேர்ச்சி வீதத்தில் கடைசி இடத்துக்கு வேலூர் மாவட்டம் தள்ளப்பட்டுள்ளது கல்வியாளர்களை சோர்வடைய செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ்1 தேர்வு கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதி முடிந்தது. தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது.

வேலூர் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 52 மாணவர்களும், 21 ஆயிரத்து 831 மாணவிகளும் என மொத்தம் 39 ஆயிரத்து 883 பேர் பிளஸ்1 தேர்வு எழுதினர். இதில் 15 ஆயிரத்து 548 மாணவிகளும், 20 ஆயிரத்து 63 மாணவிகளும் என மொத்தம் 35 ஆயிரத்து 611 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 89.29 சதவீத தேர்ச்சியாகும். அரசுப்பள்ளிகளை பொறுத்தவரை 176 பள்ளிகளில் இருந்து 20 ஆயிரத்து 108 மாணவ, மாணவிகள் பிளஸ்1 தேர்வு எழுதினர்.

இவர்களில் 17 ஆயிரத்து 13 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இது 84.61 சதவீத தேர்ச்சியாகும். அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி வீதத்தில் மட்டும் வேலூர் மாவட்டம் கடலூரை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பிளஸ்1 தேர்வை 29 பார்வையற்றவர்கள், செவித்திறன் மற்றும் பேசும் திறன் குறைந்தவர்கள் 26 பேர், ஊனமுற்றவர்கள் 49 பேர், மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் உட்பட இதர மாற்றுத்திறனாளிகள் 32 பேர் என 136 பேர் எழுதினர். இதில் பார்வையற்றவர்கள் 27 பேரும், செவித்திறன் மற்றும் பேசும் திறன் குறைந்தவர்கள் 20 பேரும், ஊனமுற்றவர்கள் 40 பேரும், இதர மாற்றுத்திறனாளிகள் 30 பேரும் என 117 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதுதவிர வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் 6 பேரும், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 2 பேரும் பிளஸ்1 தேர்வை எதிர்கொண்டனர். இவர்களுக்காக சென்னை புழல் சிறையில் தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த தேர்வில் பெண்கள் சிறையில் தேர்வு எழுதிய 2 பேரும் தேர்ச்சி பெற்றனர். ஆண்கள் சிறையில் 5 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுத்தேர்வு தேர்ச்சி வீதத்தில் ஏற்கனவே பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்தது. தற்போது பிளஸ்1 தேர்விலும் 89.29 சதவீத தேர்ச்சி வீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தையே பிடித்துள்ளது. இது கல்வியாளர்களை கவலையடைய செய்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது: 

பிளஸ்1 பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டத்தில் 89.29 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாவரவியல், இயற்பியல், விலங்கியல் ஆகிய பாட பிரிவுகளில் 90 சதவீதத்திற்கும் குறைவான மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற பாடப்பிரிவுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

அதேபோல் ஆண்கள் பள்ளியில் மாணவர்கள் 5 ஆயிரத்து 759 பேர் தேர்வு எழுதினர். இதில் 945 பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் 2 சதவீதம் தேர்ச்சி குறைந்துவிட்டது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணத்தை கண்டறிந்து, தேர்ச்சியை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக கல்வியாளர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் கருத்து கேட்டபோது, 'ஆசிரியர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லாதது, அரசுப்பள்ளிதானே நமக்கென்ன, நமது பிள்ளை தனியார் பள்ளியில்தானே படிக்கிறான் என்ற மனப்பாங்குமே வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி வீதம் சரிவுக்கு முக்கிய காரணம். கேரளாவில் தற்போது அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. 

அதேபோல், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு நடைமுறையை கொண்டு வந்தால்தான், தற்போது அரசுப்பள்ளிகளை மேம்படுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கும், கல்வியின் தரத்தை மேம்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சிக்கும் பலன் கிடைக்கும்.

அதேபோல் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக விடுமுறை நாட்களில் போராடலாம். பள்ளி வேலைநாட்களில் போராடுவது, தங்கள் போராட்டக்களத்தில் கோரிக்கைகளை விட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றவற்றை கைவிட வேண்டும். அதோடு அவர்கள் மத்தியில் நிலவும் சமுதாயம் சார்ந்த மனப்பான்மையும் களையப்பட வேண்டும்' என்றனர்.

Post Top Ad