தொலைந்து போன டிரைவிங் லைசென்ஸ் போலிஸ் ஸ்டேஷன் போகாமல் பெறுவது எப்படி? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, May 22, 2019

தொலைந்து போன டிரைவிங் லைசென்ஸ் போலிஸ் ஸ்டேஷன் போகாமல் பெறுவது எப்படி?




ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலைப் பெற தமிழக அரசு புதிய வசதியை தொடங்கியுள்ளது. இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார். இதன்படி ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், அதை மீண்டும் பெற எப்ஐஆர் பெறத் தேவையில்லை.

வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் கவனக் குறைவால் ஓட்டுநர் உரிமம் தொலைந்து போனால் என்ன செய்வது என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே உள்ளது.

பொதுவாக ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், சம்பந்தப்பட்ட நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கு புகார் மனு ஏற்பு சான்றிதழ் அளிக்கப்படும். இதற்கே 15 முதல் 20 நாட்கள் வரை காலதாமதம் ஏற்படும். அதன்பிறகே, அவர் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் புதியதாக பதிவு செய்ய முடியும்.

இதன்பிறகு ஆர்டிஓ அந்த ஆவணத்தை சரிபார்த்து ஓட்டுநர் உரிமத்தை வழங்குவார். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள இடைத்தரகர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு வருகிறார்கள்.



இந்நிலையில், தொலைந்து போன ஓட்டுநர் உரிமத்தை பெறும் முறையை எளிமைப்படுத்தி போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொலைந்துபோன ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக டூப்ளிகெட் உரிமம் பெற www.eservices.tnpolice.gov.inஎன்ற இணையதளத்தில் தொலைந்துபோன ஆவண அறிக்கை (Lost Document Report) என்ற பிரிவில் சென்று பதிவு செய்து, தாங்களே பிரிண்ட் எடுத்துக் கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதனால் வீண் அலைச்சலைத் தடுக்க முடியும். இடைத்தரகர்கள் பணம் பெறுவதையும் தடுக்க முடியும். வாகனப் பதிவு சான்று தொலைந்து போனாலும் இதே முறையை பின்பற்றி வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பின்பற்ற வேண்டுமென போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Post Top Ad