பள்ளிகளைத் திறக்கத் தயாராக உள்ளோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் - Asiriyar.Net

Monday, June 14, 2021

பள்ளிகளைத் திறக்கத் தயாராக உள்ளோம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

 






முதல்வர் எப்போது அறிவிக்கிறாரோ அப்போது பள்ளிகளைத் திறக்கத் தயாராக உள்ளோம் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (ஜூன் 13-ம் தேதி) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சேலம், கோவையைத் தொடர்ந்து 3-வது நாளாக கரூரில் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, மேல்நிலை என அனைத்துப் பள்ளிகள் மற்றும் மைய நூலகத்தில் ஆய்வு செய்கிறேன்.



நூலகங்களில் வாசகர்களுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன. உறுப்பினர் மற்றும் நூல்களின் எண்ணிக்கை, இன்னும் என்ன வசதிகள் வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. பள்ளிகளில் மாணவிகள் பாதுகாப்பாக கல்வி கற்பதற்கான சூழல் உள்ளதா? கழிப்பறைகள் ஒழுங்கான முறையில் உள்ளதா? வகுப்பறைகள், இருக்கைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதில் உள்ள பிரச்சினைகளை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று படிப்படியாகத் தீர்வுகள் மேற்கொள்ளப்படும்.



கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 75 சதவீதக் கட்டணம் மட்டும் வசூலிக்கவும் அதனை முதல் தவணையாக 30 மற்றும் 2-வது தவணையாக 45 சதவீதமாகச் செலுத்தவும் நீதிமன்றம் வழிகாட்டியிருந்தது. நிகழாண்டும் நீதிமன்ற வழிகாட்டுதல்படி தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படும்.



பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டுகளில் தவறு யார் செய்திருந்தாலும் தண்டனை வழங்கப்படும். குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உண்மைத்தன்மை அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அது குற்ற வழக்காக உள்ள பட்சத்தில் காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்


பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த வாரம் அதுகுறித்து முடிவு தெரியவரும். நீட் தேர்வு தொடர்பாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழங்கும் பரிந்துரை அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.



ஆய்வின்போது பள்ளிகள் திறப்பதற்குத் தயார் நிலையில் உள்ளனவா? ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனரா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பதற்குத் தயார் நிலையில் உள்ளோம். அனைத்து மாவட்டங்களுக்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டு பள்ளிகள் எப்போது திறக்கலாம் என முதல்வர் அறிவிக்கிறாரோ அப்போது பள்ளிகளைத் திறக்க தயாராக உள்ளோம்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.



மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து கரூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.



No comments:

Post a Comment

Post Top Ad