வீதிகள் தோறும் தண்டோரா போட்டு தலைமையாசிரியர் விழிப்புணர்வு - Asiriyar.Net

Monday, June 28, 2021

வீதிகள் தோறும் தண்டோரா போட்டு தலைமையாசிரியர் விழிப்புணர்வு

 





கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களை மாணவர்கள் பார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமத்தில் பள்ளித் தலைமையாசிரியரே வீதிகள் தோறும் சென்று தண்டோரா போட்டுள்ளார்.



கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.


இந்நிலையில், திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வி.ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் வீதி வீதியாக சென்று தண்டோரா போட்டு, மாணவர்கள் அனைவரும் கல்வித் தொலைக்காட்சியை பார்த்து பயன்பெற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



இதுகுறித்து தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: தற்போது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, கல்வித் தொலைக்காட்சியை மாணவர்களை அவசியம் பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நானும், சக ஆசிரியர்களும் சேர்ந்து இந்த முடிவை எடுத்து வீதிவீதியாக சென்று தண்டோரா போட்டோம். கல்வித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வகுப்புக்கும் நடத்தப்படும் பாடங்கள் குறித்த அட்டவணை அளிக்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் முழுமையாக பார்க்க வேண்டும். இதற்கு பெற்றோரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அப்போது வலியுறுத்தினோம்.


அப்போது பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை நிச்சயமாக கல்வித் தொலைக்காட்சியை பார்க்கச் சொல்வோம் என உறுதி அளித்தனர். கல்வித் தொலைக்காட்சி அட்டவணை தொடர்பாக பெரிய அளவில் பிளக்ஸ் போர்டும் கிராமத்தில் வைத்துள்ளோம் என்றார்.





No comments:

Post a Comment

Post Top Ad