ஆன்லைன் வகுப்பால் மனச்சோர்வு ஏற்பட்டு தலைமுடியை சாப்பிட்ட பள்ளி மாணவி: வயிற்றிலிருந்து 1 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றம் - Asiriyar.Net

Monday, June 28, 2021

ஆன்லைன் வகுப்பால் மனச்சோர்வு ஏற்பட்டு தலைமுடியை சாப்பிட்ட பள்ளி மாணவி: வயிற்றிலிருந்து 1 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றம்

 







விழுப்புரம் விழுப்புரத்தில் வசிக்கும் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த ஒராண்டுக்கு மேலாக ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி பயிற்று வருகிறார்.



அவரது பெற்றோர் பணிக்கு சென்றுவிடுவதால் அவருக்கு துணையாக வீட்டில் பாட்டி உள்ளார். அந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர் ராஜமகேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்தனர். மாணவியின் வயிற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டியை அகற்றியுள்ளனர்.


இதுகுறித்து குடல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராஜமகேந்திரன் கூறியது: மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மாணவிக்கு வயிற்று வலி, வாந்தி, அவரால் சாப்பிடமுடியவில்லை என்று அவரது பெற்றோர் கூறினர்.



அதன்பின் மாணவிக்கு ஸ்கேன் எடுத்தும், எண்டோஸ்கோப் மூலம் பார்த்தபோது வயிற்றில் முடிகளால் ஆன கட்டி இருப்பதை உறுதி செய்தோம். அக்கட்டி சிறுகுடல்வரை பரவி இருந்தது. இதனை ராபன்ஸல் ( rapunzel syndrome) என்று கூறுவார்கள். அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது.


ஆன்லைன் வகுப்பால் மாணவிக்கு மனச்சோர்வு ஏற்பட்டு, தன் தலையில் உள்ள முடிகளை பிய்த்து சாப்பிட்டுள்ளார். அதனால் முடிகளால் ஆன கட்டி ஏற்பட்டுள்ளது. முடிகளால் ஆன கட்டி என்பது இப்போதுதான் நான் பார்க்கிறேன். உலக அளவில் 60 பேருக்கு இப்படி பட்ட கட்டிகள் பதிவாகியுள்ளதாக அறிய முடிகிறது. தற்போது அந்த மாணவிக்கு மன நல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.


பொதுவாக குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது நண்பர்களுடன் உரையாடிவிட்டு வீட்டிற்கு உற்சாகமாக வருவார்கள். தற்போது கரோனா தொற்று காரணமாக மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர்.



இதனால் பயங்கர மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் ஆன்லைனில் படிக்கும் மாணவ, மாணவிகளை வீட்டில் இருப்பவர்கள் கண்காணிப்பதோடு, மனச் சோர்வு ஏற்படாத வகையில் அவர்களை உற்சாக படுத்த வேண்டும் என்றார்.


குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள்


இது குறித்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மனநல மருத்துவர் மணிகண்டனிடம் கேட்டபோது, இதை (obsession) எண்ண சுழற்சி என்பார்கள். செய்வதை திரும்ப திரும்ப செய்வது, சிலர் அடிக்கடி தன் முடியை பிடித்து இழுத்துக்கொள்வார்கள்.


சிலர் ஒரு பொருளை எங்கிருந்தாலும் எடுத்து வைத்துக்கொள்வார்கள். இதை திருடும் எண்ணம் என்று கூறமுடியாது. இதை ட்ரைகோ டிலே மேனியா என்பார்கள். இதை குணப்படுத்த மருந்துகள் உள்ளது. அச்சிறுமி மற்றும் அவரது பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் கொடுக்கவேண்டும். குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என பெற்றோர்கள் கண்காணிக்கவேண்டும். குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






No comments:

Post a Comment

Post Top Ad