9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தொழில்நுட்ப இயக்ககத்தை சார்ந்த அதிகாரிகளுடன் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு சேருவதற்கு 11ம் வகுப்பிற்கு எந்த அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதோ அதே அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்களும் முதலாம் ஆண்டு சேர்க்கப்படுவார்கள். அதாவது, 9ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் பாலிடெக்னிக்கில் சேர்க்கப்படுவார்கள். கடந்த வருடம் 10வது தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தால் அந்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பம் பெறப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். பாலிடெக்னிக்கில் 6,7 மற்றும் 8வது செமஸ்டர் தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. மாணவர்கள் எழுதும் தாள்களுக்கு ₹65 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதேபோல், சில பல்கலைக்கழகங்களில் நியமன தவறு நடந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரியார் பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் நியமன தவறுகள் நடந்துள்ளதாக செய்திகள் வந்தது.
எனவே, முதல்வருடன் கலந்து பேசி ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தலைமையில் 3 பல்கலைக்கழகங்களையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும். இதேபோல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதுகுறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 விருப்பப்பாடங்கள் இருந்தது. அதில், தமிழ் விடுபட்டிருந்தது. தற்போது 9வது விருப்பப்பாடமாக தமிழ் சேர்க்கப்படும். இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment