தமிழகத்தில், பிளஸ் ௨ பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு தள்ளிப்போகும் என, தெரிகிறது. அதிகாரிகள், உளவியல் நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் சட்டசபை கட்சித் தலைவர்கள் என, பல சுற்று ஆலோசனைக்குப்பின், இவ்விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு கருதி, பிளஸ் 2 தேர்வு குறித்து முடிவெடுக்குமாறு, மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, மத்திய சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக, பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு, உச்ச நீதிமன்றம் மகிழ்ச்சி தெரிவித்தது.
அறிக்கை
இந்நிலையில், தமிழகத்திலும் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, ஒரு தரப்பினரும்; தேர்வை நடத்த வேண்டும் என, மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இரண்டு நாட்களுக்கு முன், ஆலோசனை நடந்தது. அதில், தேர்வை ரத்து செய்வது குறித்து, கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்கலாம் என, தீர்மானிக்கப்பட்டது.இதன்படி, ஒவ்வொரு மாணவரிடமும், போனில் தொடர்பு கொண்டு, தலைமை ஆசிரியர்கள் கருத்து கேட்டுள்ளனர்.
ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினரும், தங்களின் கருத்துகளை அரசுக்கு அனுப்பியுள்ளனர். அவற்றை தொகுத்து, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அளித்துஉள்ளனர்.இதையடுத்து, பள்ளி கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வியாளர்களுடன், பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், நேற்று ஆலோசனை நடத்தினார். தேர்வை ரத்து செய்தால், எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம்; தேர்வை பாதுகாப்பாக எப்படி நடத்தலாம் என, விவாதிக்கப்பட்டு உள்ளது. அதனடிப்படையில், அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, மேலும் பல சுற்று ஆலோசனை நடத்தவும், அதன் பின், இவ்விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கவும், முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதன் துவக்கமாக, இன்று அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து, உளவியல் நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் சட்டசபை கட்சித் தலைவர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். இதன் பிறகே, பிளஸ் 2 தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என்ற முடிவெடுக்கப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் கூறுகின்றன.
கருத்துக் கேட்பில், அரசுக்கு அளிக்கப்பட்டபரிந்துரைகள்:
* பொதுத் தேர்வை நடத்த தயாராக உள்ளதாகவும், அரசின் முடிவை பின்பற்றுவதாகவும், பள்ளி கல்வி அதிகாரிகள் தரப்பில், அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது
* 'ஜாக்டோ - ஜியோ' ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், 'தேர்வை நடத்த வேண்டும். மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தந்து விடக்கூடாது' என, கூறியுள்ளனர்
* கொரோனா பரவல் முடிந்ததும், தேர்வை நடத்தலாம் என, ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், புதிய கல்வி ஆண்டு துவங்கி விட்டதால், கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்; அதுவரை காத்திருக்க முடியாது என்றும், சில ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்
* கொரோனா இரண்டாம் அலையில், உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பில் சிக்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களால், பொதுத் தேர்வை எழுத சாத்தியமில்லை என்றும், சங்கத்தின் தரப்பில் கூறப்பட்டு உள்ளது
* பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடம் கருத்து கேட்ட போது, அவர்களுக்கு பொதுத் தேர்வில் பங்கேற்கும் எண்ணமே இல்லை என்பது தெரிய வந்து உள்ளது
* 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுக்கு, 'ஆன்லைன்' சிறப்பு பயிற்சி பெறும் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், பொதுத் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என, ஆதரவு தெரிவித்து உள்ளனர்
* தேர்வை, ஆன்லைனில் நடத்தலாம்; ஏற்கனவே நடத்தப்பட்ட, 10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு அடிப்படையில், மதிப்பெண் பட்டியல் வழங்கலாம்; செய்முறை தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் வழங்கலாம். மாதிரி, திருப்புதல் தேர்வு அடிப்படையில், மதிப்பெண் தரலாம் என, பல்வேறு பரிந்துரைகளும், பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டுள்ளன.
'ஆல் பாஸ்' வாய்ப்பு பிரகாசம்!
'பிளஸ் 2 தேர்வில், மத்திய அரசை பின்பற்ற வேண்டாம்; தேர்வை நடத்த வேண்டும்' என, ஆளும் தரப்பின் ஆதரவு கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுத்தாலும், நடைமுறையில், அரசு பள்ளி மாணவர்கள் பலர், பொதுத் தேர்வால் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பால், எந்தவித ஆன்லைன் வகுப்புகளோ, வழிகாட்டுதலோ இல்லாததால், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், பிளஸ் 2 பாடங்களை படிக்காத நிலையே உள்ளது.எனவே, தேர்வை நடத்தினால், அந்த மாணவர்கள் தேர்ச்சி பெறுவதே கடினம்; அவர்களுக்கு ஏதாவது மதிப்பீட்டு முறையில், 'ஆல் பாஸ்' வழங்குவதை தவிர, வேறு வழியில்லை என, கல்வியாளர்கள் அரசுக்கு எடுத்துரைத்துள்ளனர்.
No comments:
Post a Comment