மோடி அய்யா... பள்ளியை மூடிட்டாங்க! 11ம் வகுப்பு மாணவனின் கண்ணீர் கடிதம் - Asiriyar.Net

Sunday, June 6, 2021

மோடி அய்யா... பள்ளியை மூடிட்டாங்க! 11ம் வகுப்பு மாணவனின் கண்ணீர் கடிதம்

 




தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், எனது பள்ளியை மூடிவிட்டதால், அடுத்ததாக எங்கு சேர்ந்து படிப்பது என்பது தெரியாமல் தவிப்பதாக, பிரதமர் மோடிக்கு 11ம் வகுப்பு மாணவர் கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார். 


சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் முஸ்கன் சர்மா என்பவர், பிரதமர் மோடி மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு இ-மெயிலில் எழுதியுள்ள கடிதத்தில், ‘அன்புள்ள பிரதமரே! தனேலியில் உள்ள தனியார் பள்ளி, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சென்று பயில எனக்கு விருப்பமில்லை. 11ம் வகுப்பில் நான் எடுத்த குரூப், அருகிலுள்ள பள்ளியில் இல்லை.


என் தந்தையால், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அவருக்கு உடல்நலம் பாதிப்பு உள்ளதால் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இன்றைய சூழ்நிலையில், வேறு பள்ளியில் சேர்ந்து என்னால் படிக்க முடியாது. எனவே, பிரதமர்  மோடி அவர்களே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள். நான் மிகவும் நன்றாக படிக்கும் மாணவன். 


என்னுடைய இந்த சூழ்நிலையில், எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இக்கட்டான இந்த சூழ்நிலையில், என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. எங்கள் குடும்பத்தில் நிதி பிரச்னை உள்ளது. எனது படிப்பைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுவதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். எங்கு படிக்க வேண்டும் என்றும் எனக்குத் தெரியவில்லை.


பள்ளி நிர்வாகம் என்னுடைய ‘டிசி’ (மாற்றுச்சான்று) கொடுத்த பின்னர், அதனை வாங்கிக் கொண்டு புவனேஷ்வருக்கு செல்ல வேண்டும். ஆனால், அங்கு சென்று படிக்கக நான் தயாராக இல்லை. 


எனக்கு யார் உதவுவார்கள் என்று புரியவில்லை. இந்த கொரோனா நெருக்கடியில், எந்தப் பள்ளி என்னை சேர்த்துக் கொள்ளும் என்பதும் தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ளார். அதில், மாணவர் முஸ்கன் சர்மா தனது முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட முழுமையான  விபரங்களையும், அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad