பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை நிர்ணயம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவல் மற்றும் அதன் பாதிப்பு காரணமாக, கடந்த கல்வி ஆண்டில் ஒன்று முதல் பிளஸ் 1 வரை ஆண்டு தேர்வு மற்றும் பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
பிளஸ் 2 பொது தேர்வுகள் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டன. பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்ய தனியாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.அதே நேரம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகள் இன்னும் அறிவிக்கப்பட வில்லை.
பிளஸ் 2 மாணவர்கள் கல்லுாரிகளில் சேரும் முன், 10ம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 மற்றும் 'பாலிடெக்னிக்'கில் சேர்ந்து வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்.ஆனால், இன்னும் மதிப்பெண் வழங்கும் முறை நிர்ணயம் செய்யப்படவில்லை.
இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:கடந்த கல்வி ஆண்டு முழுதும் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் உள்ளிட்ட எந்த தேர்வுகளையும், 10ம் வகுப்பில் நடத்தவில்லை. எனவே, அவர்கள் பெற்றதாக எந்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுக்க முடியவில்லை.
ஒன்பதாம் வகுப்பில் பருவ தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்கலாம் என்றால், பல தனியார் பள்ளிகள், பருவ தேர்வு மதிப்பெண்களுக்கான ஆவணங்கள் வைத்து இருக்கவில்லை. தற்போது, தனியார் பள்ளிகளில் மதிப்பெண்கள் கேட்டால், அவர்கள் விருப்பத்துக்கு மதிப்பெண்களை பாரபட்சமாக அள்ளி வழங்கலாம்.அரசு பள்ளிகளில், பல மாவட்டங்களில் பருவ தேர்வுக்கான, மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் இல்லை. எனவே, மதிப்பெண் வழங்கும் முறையை வெளியிடுவதும், வழிகாட்டுதலை வெளியிடுவதும் தாமதமாகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment