விநாயகர் சதுர்த்தி SPECIAL - கொழுக்கட்டை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, September 1, 2019

விநாயகர் சதுர்த்தி SPECIAL - கொழுக்கட்டை





தேவையான பொருட்கள் : 

1. அரிசி ஒரு ஆழாக்கு 
2. வெல்லம் 1/4 கிலோ 
3. முற்றிய தேங்காய் 1 
4. ஏலக்காய் 10 


செய்முறை:-

1. பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியை நைசான மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

2. ஒரு ஆழாக்கு மாவிற்கு 2 1/2 ஆழாக்கு தண்ணீரை அளந்து உருளை மாதிரி அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். 

3. மாவு வெண்மையாக இருக்கும் பொருட்டு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைத் தண்ணீரில் விடவும். தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை விட்டு கீழே இறக்கி வையுங்கள். 

4. அரைத்து வைத்த மாவில் ஒரு ஆழாக்கு மாவைச் சிறிது சிறிதாக உருளித் தண்ணீரில் தூவுங்கள், அதை கட்டி தட்டாமல் கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். 

5. தண்ணீரும் மாவும் நன்றாகக் கலந்த பின் மீண்டும் அடுப்பில் வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும். மாவு டேஸ்டாக இருக்க ஒரு சிட்டிகை உப்பைத் தண்ணீரில் போடலாம். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும், மாவை இறக்கி வைத்து ஒரு தட்டு போட்டு மூடிவைத்துவிட வேண்டும். இப்போது கொழுக்கட்டைக்கு மாவு தயார். 

6. ஒரு முற்றிய தேங்காயைப் பூப்போல் துருவி 1/4 கிலோ வெல்லமும் சேர்த்து அடுப்பை நிதானமாக எரியவிட்டு கிளறவேண்டும். 

7. வெல்லமும் தேங்காயும் கலந்து ஒட்டாமல் வரும் பதத்தில், 10 ஏலக்காய்களைப் பொடி செய்து சேர்த்துக் கிளறி இறக்கி வைத்து விடவேண்டும். இப்போது பூரணம் தயார். 

8. அரை மணி நேரம் கழித்து மாவை சிறிய எலுமிச்சம் பழ சைஸில் (கையில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு) உருட்டி கிண்ணம் போல் செய்து கொள்ளுங்கள். 


9. பூரணத்தை அதில் ஒரு ஸ்பூன் வைத்து, பூரணம் வெளியில் தெரியாதவாறு மூடி வைத்து விடவேண்டும். 

10. இம்மாதிரி 10 கொழுக்கட்டைகள் செய்தபின் குக்கரில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் வைத்து வெயிட் போடாமல் 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். ஆறியபின் கொழுக்கட்டைகளை எடுக்க வேண்டும்.

Post Top Ad