சிறந்த ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது: மாவட்ட வாரியாக தேர்வு செய்ய குழு அமைப்பு ( FULL DETAILS ) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 11, 2019

சிறந்த ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது: மாவட்ட வாரியாக தேர்வு செய்ய குழு அமைப்பு ( FULL DETAILS )



ஒரு மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர்கள் வீதம் அனைத்து மாவட்டங்களிலும் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்களின் அடிப்படையில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அதன் விவர அறிக்கையைப் புகைப்பட ஆதாரங்களுடன் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 இது தொடர்பாக,  பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
 அரசு,  ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள்,  உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த முறையில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர்,  கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்,  குழந்தைகள் சேர்க்கை, பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என ஒரு மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர் வீதம் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் பாராட்டுச் சான்றுடன் ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். 
மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல்,  வினவுதல்,  பயன்படுத்துதல், புதிய விஷயங்களை உருவாக்குதல் என்ற நிலையில் வளர்த்தெடுப்பவராகவும்,  பள்ளி இணைச் செயல்பாடுகளான இசை, ஓவியம்,  தேசிய மாணவர் படை,  சாரண, சாரண இயக்கம், நாட்டு நலப்பணித் திட்டம்,  இளஞ்சிறார் செஞ்சிலுவை,  மாநிலமாவட்ட  அளவிலான விளையாட்டுப் போட்டிகளில்  பங்கு கொள்ளுதல், பரிசுகளை வெல்லுதல், தேசிய விழாக்களை நடத்துதல் மற்றும் மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்க கூடியவராக இருக்க வேண்டும். அதே வேளையில் தன்னுடைய தனித்திறமையால் பள்ளியின் வளர்ச்சிக்கும்,  முன்னேற்றத்துக்கும் உதவி செய்யக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.  ஆசிரியர் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் பயிலும் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும், மாணவர்களை உளவியல் அடிப்படையில் வழிநடத்துபவராகவும் இருக்க வேண்டும். 

  வகுப்பறை கற்பித்தலில்... இந்த விருது வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.  ஆசிரியர் பணியிலும், பகுதி நிர்வாகப் பணியிலும் ஈடுபடும் ஆசிரியர் பிரிவினருக்குப் பொருந்தாது.  மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் தமிழக அரசால் வழங்கப்படும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களைப் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. 
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி முதன்மைக் கல்வி அலுவலர்,  மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்டக் கல்வி அலுவலர்கள்,  மூத்த வட்டாரக் கல்வி அலுவலர்,  தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமையாசிரியர் ஆகியோரைக் கொண்ட மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவானது பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அதன் விவர அறிக்கையைப் புகைப்பட ஆதாரங்களுடன் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Post Top Ad