சாதனை படைக்கத் தொடர்ந்து உழைப்போம்!’ - தேவகோட்டைப் பள்ளிக்கு இஸ்ரோ சிவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம் - Asiriyar.Net

Friday, September 13, 2019

சாதனை படைக்கத் தொடர்ந்து உழைப்போம்!’ - தேவகோட்டைப் பள்ளிக்கு இஸ்ரோ சிவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்






இஸ்ரோ தலைவர் சிவன் தேவகோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கு நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். ஏன் அந்தப் பள்ளிக்கு அந்தக் கடிதம் எழுதினார், என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் பார்க்கும் முன்பு, அந்தப் பள்ளியைப் பற்றிச் சில செய்திகளைப் பார்க்கலாம்.

தேவகோட்டை

தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, மாணவர்கள் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. உதாரணமாக, வங்கிகளுக்கு அழைத்துச் செல்வது, தீ அணைப்புத் துறையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடச் செய்வது, கதை, பாடல், மருத்துவம் சார்ந்த அறிஞர்களைப் பள்ளியில் வரவழைத்து புதிய அனுபவங்களைத் தருவது என்று மற்ற பள்ளிகளை விடவும் வித்தியாசம் காட்டி வருகிறது. கஜா புயலின்போது, மாணவர்கள் தங்களின் உண்டியல் சேமிப்புப் பணத்தை நிவாரணமாக அனுப்பி வைத்து நெகிழ வைத்தனர்.



சமீபத்தில், `சந்திரயான் - 2' விண்கலம் விண்வெளியில் செலுத்தப்படுவதை மாணவர்களிடம் விளக்கமாகக் கூறி, விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறும் வீடியோவை வெளியிட்டனர். அது சமூக ஊடகத்தில் பரவலாகக் கவனம் பெற்றது. `சந்திரயான் -2' திட்டமிட்ட சாதனையை அடைய முடியாத சோகம் நாட்டினர் அனைவருக்குமே உண்டு. இதற்காக, இப்பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி நதியா, இஸ்ரோ தலைவர் சிவனுக்கு நம்பிக்கை தரும் கடிதத்தையும் எழுதியிருந்தார்.


தேவகோட்டை பள்ளி

இந்தப் பள்ளியின் தொடர்ச்சியான செயல்பாடுகளைப் பார்த்த இஸ்ரோ சிவன், பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கத்துக்குத் தனியே ஒரு கடிதம் அனுப்பியுள்ளர்.




அந்தக் கடிதத்தில், ``சந்திரயான் -2 விண்கலம் நிலவின் தரையில் இறங்குவதற்காக உங்கள் பள்ளியில் பிரார்த்தனை கூட்டம் நடத்தியதை அறியும்போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், உங்கள் பள்ளி மாணவிகள் சந்திராயன் - 2 தரையிறங்கும் ஆறு நிலைகளை விரிவாகச் சொல்லிய வீடியோவை யூடியூபில் பதிவேற்றியதற்கு மிக்க நன்றி.

இஸ்ரோ சிவன்

முடிந்த அளவுக்கு முயற்சிகள் எடுத்தும் சந்திரயான் -2 விண்கலத்தை நிலவின் தரையில் வெற்றிகரமாக இறக்க முடியாமல் போய்விட்டது. இந்த பின்னடைவால் நாங்கள் மனம் கலங்காமல், உங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் வாழ்த்துகளால் இந்தியா விண்வெளித்துறையில் சாதனை படைக்கத் தொடர்ந்து உழைப்போம்.

உங்கள் கல்வி சேவைக்கும் உங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


``இஸ்ரோ தலைவர் சிவனின் கடிதம் அந்தப் பள்ளி மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. இதற்கு உதவிய ஆசிரியர் ஶ்ரீதருக்கு என் நன்றி" என்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்.


Post Top Ad