கழுத்தளவு தண்ணீர்; விடுமுறை எடுத்ததே கிடையாது - 11 வருடங்களாக ஆற்றைக் கடந்து பள்ளிக்கு வரும் அசத்தல் ஆசிரியை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, September 12, 2019

கழுத்தளவு தண்ணீர்; விடுமுறை எடுத்ததே கிடையாது - 11 வருடங்களாக ஆற்றைக் கடந்து பள்ளிக்கு வரும் அசத்தல் ஆசிரியை!



ஒருபோதும் அவர், இதற்கெல்லாம் பயந்து வீட்டில் முடங்கியதேயில்லை. மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில், இடி, மழை, எதுவாக இருந்தாலும் பள்ளிக்கு வந்துவிடுவார் பினோதினி.


ஒடிசா மாநிலம், தென்கனல் மாவட்டத்தில் இருக்கிறது, `ரதியபலா தொடக்கப்பள்ளி’. ஒப்பந்த ஆசிரயர்களாக அம்மாநில அரசு ஆயிரக்கணக்கானோர்களை பணியமர்த்தியபோது, அதில் ஒருவராக நியமிக்கப்பட்டவர்தான் பினோதினி.

அவர், 2008-ம் ஆண்டு முதல், `ரதிபலா’ பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். அந்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் சபுவா நதியைக்கடந்துதான் செல்ல வேண்டும். பருவமழைக்காலங்களில் நதியில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஓடும். வெயில்காலங்களில் நதி வற்றியிருக்கும் என்பதால், அந்தநாள்களில் சிரமம் இருக்காது. மொத்தம் 53 மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையாக இருக்கிறார் பினோதினி. நாள்தோறும் வீட்டிலிருந்து 3 கிலோமீட்டர் நடந்து, ஆற்றைக் கடந்து வர வேண்டிய கட்டாயம். ஆனால், ஒருபோதும் அவர், இதற்கெல்லாம் பயந்து வீட்டில் முடங்கியதேயில்லை. மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில், இடி, மழை, எதுவாக இருந்தாலும் பள்ளிக்கு வந்துவிடுவார்.

சபுவா ஆற்றைக் கடந்து செல்வதற்காகப் பாலம் ஒன்று கட்டப்படும் என்ற அறிவிக்கப்பட்டு, அந்தத் திட்டம் நிலுவையில் இருக்கிறது.``என்னைப் பொறுத்தவரை எல்லாவற்றையும்விட எனக்கு வேலைதான் முக்கியம். வீட்டிலிருந்து நான் என்ன செய்யப்போகிறேன்?” எனக் கேள்வி எழுப்புகிறார் பினோதினி. தொடக்கத்தில் 1,700 ரூபாய் ஊதியத்தில் வேலைக்குச் சேர்ந்தவர், இன்று 7,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறார். 2 நாள்களுக்கு முன், கழுத்தளவு தண்ணீருடன் பினோதினி ஆற்றைக்கடக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

மழை பெய்து, ஆற்றில் தண்ணீர் ஓடும் நாள்களில், மாணவர்களும் தலைமை ஆசிரியரும்கூட பள்ளிக்கு வராமல் இருப்பது வழக்கம். ஆனால், பினோதினியைப் பொறுத்தவரை எப்படியாவது பள்ளிக்கு வந்துவிடுவார். ``நான் எப்போதும் கூடுதலாக ஒரு உடை வைத்துக்கொள்வேன். ஆற்றைக் கடக்கும்போது, மொபைல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைப் பிளாஸ்டிக் கவர் ஒன்றுக்குள் வைத்து, அதை என் தலைக்கு மேல் பிடித்தபடி, ஆற்றைக் கடப்பேன். பள்ளிக்குச் சென்று என்னுடைய யூனிஃபார்மான பிங்க் சாரியை மாற்றிக்கொள்வேன். பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போதும், இதே நிலைதான் தொடரும்.

சமயங்களில் உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுப்பு எடுக்க மாட்டேன். இரண்டாண்டுகளுக்கு முன், ஒருநாள் ஆற்றில் நிலைதடுமாறி விழுந்தேன்” என்கிறார் பினோதினி.
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியையாக இருக்கும் இவர், தன் அண்ணன் வீட்டில் தங்கியிருக்கிறார். 49 வயதான அவர் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. 
இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் ஒருவர் பேசுகையில், ``ஆண் ஆசிரியர்கள்கூட செய்யத்துணியாததை, மாணவர்களுக்காக சிரமங்களைக் கடந்து செய்து வருகிறார் பினோதினி. மாணவர்கள் பள்ளிக்கு வராமல்கூட போகலாம். ஆனால், பினோதினி ஒருபோதும் வரத் தவறியதில்லை. அவருக்கு சிறந்த சேவைக்கான விருது கொடுக்கப்பட வேண்டும்” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.பினோதியின் செயல் குறித்துப் பேசும் கலெக்டர் புமேஷ் பேஹ்ரா, ``பள்ளி ஆசிரியர்கள் இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது. இதுகுறித்த தகவல்களைச் சேகரித்த பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.


தமிழ்நாட்டிலும் கடலோரம், மலைகிராமம், காடு சார்ந்த, தீவு போன்ற குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் எண்ணற்ற ஆசிரிய, ஆசிரியைகள் தொடர்ந்து பணிபுரிந்து வருவது வணக்கத்திற்குரியவையாக உள்ளன. இதுபோன்ற பள்ளிகளுக்கு அன்றாடம் சென்று வருவது என்பது எளிய செயலல்ல. இருப்பினும் துணிவுடன் அத்தகைய போக்குவரத்து உள்ளிட்ட ஒருவசதியும் இல்லாத குக்கிராமங்களில் தம் கல்விப் பணியுடன் சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டு வரும் ஆசிரியப் பெருமக்களின் அருஞ்செயல்களை எண்ணிப்பார்க்க வேண்டும். இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் வாய்க்கப் பெற்ற சில ஆசிரியர்கள் பாக்கியவான்கள்!

Post Top Ad