புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும்...நடிகர் சூர்யா பேச்சு - Asiriyar.Net

Sunday, July 14, 2019

புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும்...நடிகர் சூர்யா பேச்சு
சமமான கல்வியை கொடுக்காமல் கல்வித்தரத்தை எப்படி உயர்த்த முடியும்? என புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் உள்ள ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யா, மத்திய அரசின் புதிய கல்விகொள்கை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, 30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது புதிய கல்விக்கொள்கை என்றும் புதிய கல்விக் கொள்கையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 _மேலும், தகுதித்தேர்வு, நுழைவுத்தேர்வில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது_ என கூறினார். அதேபோல ஓராசிரியர் பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்து இருப்பது சரியல்ல என்றும், அப்படி பள்ளியை மூடினால் மாணவர்கள் எங்கே செல்வார்கள் என கேள்வி எழுப்பினார்.

அதேபோல, ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்க கூடாது என கருத்து தெரிவித்துள்ளார். 5-ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும் என்றும் 6.5 கோடி மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். 60% மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள், புதிய கல்விக்கொள்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது அவசியம், அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை, 10 ஆண்டுகளாக ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் 30% மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள்? என்று கேள்வி எழுப்பிய நடிகர் சூர்யா, ஒரு ஆசிரியர், 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூடினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றார்.

கலை அறிவியல் கல்லூரியில் சேரவும் புதிய கல்விக்கொள்கையில் நுழைவுத் தேர்வு உள்ளது. எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு நடத்தினால் மாணவர்கள் எப்படி படிப்பது என்று கேள்வி எழுப்பினார். நுழைவுத் தேர்வுகளால் தனியார் பயிற்சி மையங்கள் அதிகரிக்கும், தனியார் பயிற்சிப்பள்ளிகள் நாடு முழுவதும் ரூ.5000 கோடி வருமானம் ஈட்டுகின்றன, கற்பித்தல் என்ற முறைக்கு பதில் கோச்சிங் சென்டர் முறை வரும் என்றார். நாடு முழுவதும் உள்ள 50,000 கல்லூரிகளை 12,000 கல்லூரிகளாக குறைக்க திட்டம் என்றும் கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் அபாயம் உள்ளது.

நடிகர் கார்த்தி பேச்சு:

கல்வி வியாபாரம் ஆகிவரும் நிலையில் நல்ல ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளதால் தான் தற்போது வரை கல்வி காக்கப்பட்டு வருகிறது என்றார்.

Post Top Ad