RTE - தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: ஜூலை 5 முதல் இணையத்தில் விண்ணப்பிப்பது எப்படி? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, June 25, 2021

RTE - தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: ஜூலை 5 முதல் இணையத்தில் விண்ணப்பிப்பது எப்படி?

 




கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12(1) (சி)-ன்படி, சிறுபான்மை அல்லாத அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி அல்லது 1-ம் வகுப்புகளில், குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும்.



இந்நிலையில், இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''2021- 22ஆம் கல்வியாண்டில் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்புகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் இணையவழியில் விண்ணப்பங்களைப் பெற்று, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் உள்ள காலி இடங்கள் குறித்த விவரங்களை ஜூன் 24ஆம் தேதி முதல் பெறவேண்டும். அதையடுத்து 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பள்ளி அறிவிப்புப் பலகையிலும், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் ஜூலை 2ஆம் தேதி வெளியிடவேண்டும்.



பள்ளிகள் ஜூலை 3ஆம் தேதி முதல் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்க வேண்டும். அதையடுத்துத் தங்களின் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர் ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். https://rte.tnschools.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிப்பது அவசியம்.



பள்ளியில் உள்ள இடங்களை விட அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் ஆகஸ்ட் 10 அன்று குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதே தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரங்களைப் பள்ளி அறிவிப்புப் பலகையிலும், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் வெளியிடவேண்டும். ஆகஸ்ட் 14ஆம் தேதி மாவட்ட அளவிலான கல்வி அதிகாரியிடம், சேர்க்கை விவரங்களைத் தனியார் பள்ளிகள் அளிக்க வேண்டும்.


தனியார் பள்ளிகள் எல்கேஜி மற்றும் 1-ம் வகுப்பு சேர்க்கை தொடர்பாக உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.



பெற்றோர்கள் விண்ணப்பிக்கும்போது, 


* புகைப்படம், 


* பிறப்புச் சான்று அல்லது பிறப்புச் சான்றிதழுக்கான பிற ஆவணம், 


* இருப்பிடச் சான்று, 


* வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ்), 


* வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் முன்னுரிமை கோரும் நபர்கள் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட நிரந்தர ஆவணங்களின் நகல், 


* சாதிச் சான்றிதழ் 


ஆகிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad