உடல் பருமன் இருப்பவர்களுக்கு கொரோனா ஆபத்து அதிகமா? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, June 4, 2021

உடல் பருமன் இருப்பவர்களுக்கு கொரோனா ஆபத்து அதிகமா?

 






பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் விஜயலட்சுமி.


``நிச்சயம் தொடர்புண்டு. பருமனானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது அது தீவிர கோவிட் நோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் இறப்பு விகிதமும் அதிகம்.



பருமனானவர்களை உடனடியாக எடை குறைத்து, கோவிட் பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள அறிவுறுத்த முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் அவர்கள் வேறுசில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றலாம். பருமனானவர்களுக்கு நீரிழிவு இருந்தால் ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும். அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உடனடியாக முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.



சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில் வாரத்துக்கு 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கு, ஐசியூ போகும் வாய்ப்பு குறைவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே தினமும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். பருமனானவர்கள் உடனடியாக உணவுக் கட்டுப்பாட்டுக்குத் திரும்ப முடியும். மருத்துவ ஆலோசனையோடு நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பேலன்ஸ்டு உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும். உடனடியாக 20 கிலோ குறைப்பது சாத்தியமில்லை என்றாலும் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் உடலை டோன் செய்ய முடியும். ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.


இவை எல்லாவற்றுக்கும் மேலாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதன் பிறகும் மாஸ்க் அணிவதையும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் பின்பற்ற வேணடியது மிக மிக அவசியம்".



உடல் பருமனானவர்களுக்கு கொரோனா பாதித்தால் ரிஸ்க் அதிகம் என்கிறார்கள். கொரோனா காலத்தில் பருமனானவர்களுக்கான டயட் ஆலோசனைகள் என்ன?


பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன்.


``கொரோனா காலத்தில் என்றில்லை, இங்கே நான் பகிர்பவை உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான பொதுவான ஆலோசனைகள். உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். புரதச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த மீல் ரீப்ளேஸ்மென்ட் பவுடர்கள் கிடைக்கின்றன. 



வெறும் தண்ணீர் சேர்த்து மில்க்ஷேக் போல குடிக்கலாம். தினமும் குடிக்கலாம். ஒருவேளை உணவுக்கு பதிலாக இதை எடுத்துக்கொள்ளலாம். அடுத்தவேளை நீங்கள் உண்ணும் உணவில் சாலட், சூப், சுண்டல், எண்ணெய் குறைவாகச் சேர்த்துச் சமைத்த அசைவ உணவுகள், முட்டை, கீரை, காய்கறிகள் போன்றவை இடம்பெறட்டும். உங்கள் சாப்பாட்டுத் தட்டில் பருப்பும், காய்கறிகளும் நிறைய இருக்கட்டும்.



தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு வேளை உணவிலும் மோர், சூப் அல்லது சாலட் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். அவை உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும். பசிக்கும்போது நொறுக்குத்தீனிகளுக்கு பதில் பழங்கள் சாப்பிடவும். 


உணவை நன்கு மென்று சாப்பிடவும். சாப்பிடும்போது போன் பேசுவது, டி.வி பார்ப்பது போன்றவை வேண்டாம். சரியான நேரத்துக்குத் தூங்கவும். ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்படுத்தும் டெக்னிக்குகளை தெரிந்துகொண்டு பின்பற்றுங்கள். அதன் மூலம் தேவையற்ற உணவுத் தேடல் தவிர்க்கப்படும். உடற்பயிற்சியையும் தினசரி வழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள்".













Post Top Ad