ஆசிரியர்களை நியமிப்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, June 22, 2021

ஆசிரியர்களை நியமிப்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு.

 








ஆசிரியர் நியமனம் - கல்வித்துறை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு.


மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிப்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும்.


30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமனம் இருக்க வேண்டும்.


மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நெல்லை ஹைகிரவுண்ட் மு.ந.அப்துர் ரஹ்மான் மேல் நிலைப்பள்ளி தாளாளர் முகமது நாசர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:


எங்கள் பள்ளியில் 706 மாணவர்கள் பயில்கின்றனர். 18 ஆசிரியர்கள், 2 ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் உள்ளனர்.


2019-ல் பள்ளிக்கல்வித்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 முதல் 10 வகுப்புகளில் தமிழ் வழி பிரிவுக்கு இணையாக ஆங்கில வழி பிரிவு தொடங்க அனுமதி வழங்கியது. அதன்படி எங்கள் பள்ளியில் ஆங்கில வழி பிரிவு தொடங்கப்பட்டது.


ஆங்கில வழிப்பிரிவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கவும், அறிவியல் ஆசிரியர் உபரியாக இருப்பதாக அறிவித்ததை ரத்து செய்யவும், பள்ளியில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக 3 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கவும் அனுமதி கோரி முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தோம். அவர் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.


அவரது உத்தரவை ரத்து செய்து ஆங்கில வழி பிரிவுக்கு ஆசிரியர் நியமனத்துக்கும், கூடுதலாக 3 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


ஒவ்வொரு பள்ளியையும் தனி அலகாக கருத வேண்டும். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் இருக்க வேண்டும். ஆசிரியர் நியமனம் தொடர்பாக மனு அளிக்கும் போது, அந்த மாவட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் உபரி ஆசிரியர் எண்ணிக்கையை சமன் செய்யத பிறகே புதிய ஆசிரியர் நியமனத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதன் அடிப்படையில் மனுதாரர் அனுப்பிய மனுவை முதன்மைக் கல்வி அலுவலர் நிராகரித்தது செல்லாது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நியமனம் செய்வது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.


இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.


Post Top Ad