`பணம் வேண்டாம்... உணவாகவே கொடுங்கள்' - அரசுக்கு வலுக்கும் கோரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, July 10, 2020

`பணம் வேண்டாம்... உணவாகவே கொடுங்கள்' - அரசுக்கு வலுக்கும் கோரிக்கை

கிராமப்புற மாணவர்கள் பலரும் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு சாப்பாட்டையே அதிகளவு உண்ணுகின்றனர். தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்களில் இது ஒரு நல்ல திட்டம் எனப் பாராட்டப்படுகிறது.


இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் இயங்காத காரணத்தால் மாணவர்களுக்கு சத்துணவு கிடைக்கவில்லை. இதற்காக அரசு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட பணத்தை மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் பணமாக வழங்க உள்ளதாக அரசு ஆணை வெளியிட்டு, அதன் விபரங்களை சேகரிக்க அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



`இந்நிலையில் இவ்வாறு பணத்தை மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு நிச்சயம் சென்றடையாது’ எனச் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து நம்மிடம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத் தலைவருமான வசந்தி தேவி, ``அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பணம் அவர்களுக்கு சத்துணவாகப்போகும் என்பது கேள்விதான். தற்போது வேலை வாய்ப்பு இல்லாத சூழலில் குழந்தைகளுக்கு சத்துணவுக்காகப் பணம் போட்டால் அது வேறு மாதிரியான செலவுகளுக்குத்தான் பயன்படும்.

குறிப்பாக, பொறுப்பற்ற குடும்ப தலைவர்கள் அந்தப் பணத்தை டாஸ்மாக் கடைகளில்தான் செலவு செய்வார்கள். எனவே, பணமாக வழங்காமல், உணவாக வழங்க வேண்டும். பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதே கிராமத்தில் அல்லது நடந்து செல்லும் தூரத்தில்தான் 90% மாணவர்கள் படிப்பார்கள். அதனால் எப்போதும் போல பள்ளியில் சமைத்து அதற்கான நேரத்தை ஒதுக்கி மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமரவைத்து உணவை வழங்கலாம். இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம்.


அவருக்கு உதவியாக சுழற்சி முறையில் இரண்டு ஆசிரியர்களையும் நியமிக்கலாம். இதில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடாகக் கிருமி நாசினிகளையும் வழங்கலாம். மேலும், தேவைப்பட்டால் சமூக ஆர்வலர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படித் திட்டமிட்டு மாணவர்களுக்கு உணவை வழங்க முடியும். இதைக் கேரள அரசு சாத்தியப் படுத்தியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு சத்தான உணவை வழங்க முடியும். இல்லை என்றால் ஒரு ஊட்டச்சத்து இல்லாத தலைமுறையாக மாறிவிடக்கூட வாய்ப்புள்ளது.

பல ஏழை, எளிய மாணவர்களுக்கு பள்ளி உணவுதான் முழுமையான சாப்பாடாக உள்ளது. வீட்டில் தட்டுப்பாடும் குறைகிறது. இதை ஆராய்ந்து அரசு செயல்பட வேண்டும். இப்படி எந்தச் செயல்முறையிலும் உணவு வழங்க முடியாத மாணவர்களுக்கு மட்டும் அரசி, பருப்பு, மளிகைப் பொருள்களை வழங்கலாம். சத்துணவு என்பது மாணவர்களின் அடிப்படை உரிமை அதை அரசு தடையின்றி வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார்.


தமிழ்நாடு சத்துணவு சங்க மாநில பொதுச் செயலாளர் நூர்ஜஹான், ``சத்துணவு திட்டம் 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு ஏழை, எளிய குழந்தைகள் படிக்கவும், உடல் அளவில் ஆரோக்கியமாக வளர்ச்சியடையவும் பயனுள்ளதாக அமைந்துவருகிறது.

தற்போதைய கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் சத்துணவு மையங்களும் மூடப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுவது உணவு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த சத்துணவை நேரடியாக வழங்காமல், அதற்கான தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு ஏற்றதில்லை. எனவே, எப்போதும் போல வழங்கும் உணவை பாதுகாப்பு வழிமுறைகளில் வழங்கலாம்.

இதற்கு சத்துணவு மைய ஊழியர்கள் தயாராக இருக்கிறோம். இதை வெளிப்படுத்தும் விதமாகத் தமிழகம் முழுதும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டமும் நடத்தியுள்ளோம். எனவே, அரசு இதன் முக்கியத்துவம் கருதி முடிவெடுக்க வேண்டும். எப்போதும் அரசு சத்துணவு ஊழியர்களிடம் அரிசி, பருப்பு, எண்ணெய், உப்பு, பாசிப்பயறு, சுண்டல் உள்ளிட்டவைகளை நேரடிப் பொருளாக வழங்கிவிடும். அதுபோக மசால் பொருள்கள், காய்கறிகள், எரிபொருள் உள்ளிட்டவைக்கு பணமாக வழங்கும். அதில் 1 முதல் 5-ம் வகுப்பு குழந்தைகளுக்கு பருப்புடன் வழங்கும்போது தலைக்கு ஒரு மாணவருக்கு ரூ.1.75 பைசா வழங்கும். பருப்பு வழங்காத நாள்களுக்கு ரூ.2.28 பைசா வழங்கும்.


இதே போல் 6-ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பருப்பு வழங்கும் நாள்களில் ரூ.1.89 பைசாவும், பருப்பு இல்லாத நாள்களில் ரூ.2.42 பைசாவும் வழங்கும். ஆனால் தற்போது அரசு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பணத்தை எந்த அடிப்படையில் வழங்க உள்ளது என்று தெரியவில்லை. எனவே திட்டத்தை நடைமுறை படுத்தும் முன் மாணவர்களின் நலனை உணர்ந்து அரசு முடிவு செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.


இது குறித்து சத்துணவுத் துறை அதிகாரிகளிடம் பேசிய போது, ``பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு 'மே' மாதத்திற்கான சத்துணவுக்கு பதிலாக உலர் உணவுப் பொருட்களை தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்க உத்தரவிட்டு அரசாணை வெளிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அரசு உணவாக (சத்துணவு) வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளதால் குழந்தைகளின் நலன் கருதி இவ்வாறு திட்டமிட்டுள்ளது. இது ஓரளவிற்கு மாணவர்களுக்கு சாதகமாக இருந்தாலும் அடுத்த அரசாணைகளில் முடிவுகளில் மாறுதல்கள் இருக்கலாம். மீண்டும் வரும் அரசாணை பொறுத்தே திட்டங்களில் மாற்றம் இருப்பது தொடர்பாக தெரியவரும்" என்றனர்.

Post Top Ad