Corona பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தமிழக மருத்துவரின் ஆலோசனை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, April 15, 2020

Corona பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தமிழக மருத்துவரின் ஆலோசனை






கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவர் 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்காக பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.

இளம் மருத்துவரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவருடைய பெயர், ஊர் மற்ற அடையாளங்களைத் தவிர்க்கிறோம்.

கரோனா விழிப்புணர்வுக்காக அவர் அளித்த பேட்டியில் இருந்து:

வணக்கம் டாக்டர். எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்குத் தொற்று ஏற்பட்டது எப்படி?

நலமாக உள்ளேன். எனக்கு கடந்த திங்கள் கிழமை தொற்று உறுதியானது. இன்று சிகிச்சையின் மூன்றாவது நாள். கரோனா வார்டில் சிகிச்சை அளித்துவிட்டு ஒரு வாரம் சுயமாக என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்.

6-வது நாளன்று தொண்டயில் லேசாக கரகரப்பு ஏற்பட்டது. உடனே நான் எனக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். தொண்டையில் இருந்து சளி மாதிரி எடுத்துப் பரிசோதனை செய்தனர். திங்களன்று தொற்று உறுதியானது.

ஒரு மருத்துவராக நீங்கள் தகுந்த முன்னேற்படுகளுடன் தான் சிகிச்சை அளித்திருப்பீர்கள்? அப்படியிருக்க உங்களுக்குத் தொற்று ஏற்பட எங்கே கவனக் குறைவு ஏற்பட்டது?

இதை கவனக்குறைவு என்று சொல்ல இயலாது. உலகம் முழுவதுமே மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். அதற்குக் காரணம் அவர்களின் கவனக் குறைவு அல்ல. கரோனா வைரஸ் கான்சன்ட்ரேசன். கரோனா வார்டில் 20 பேர் இருக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அங்கு நாங்கள் சிகிச்சைக்குச் செல்லும்போது 20 பேரின் சுவாசக் காற்றும் அங்கேதான் இருக்கும். கரோனா வைரஸ் ஏரோஸால். அதனால் காற்றில் மில்லியன் கணக்கில் வைரஸ் இருக்கும். வைரஸின் அடர்த்தி மிக மிக அதிகமாக இருக்கும்போது பாதுகாப்பு உபகரணங்களையும் மீறி தொற்று ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம்.

கரோனா பாசிட்டிவ் என்று தெரிந்தவுடன் எப்படி உணர்ந்தீர்கள்?

முதலில் சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், ஒரு மருத்துவர் என்ற முறையில் நோய் பற்றி தெரிந்திருந்தால் 2 மணிநேரத்தில் மனது இயல்புக்குத் திரும்பியது. நான் ஏ சிம்ப்டமேட்டிக் (Asymptomatic). பெரிதாக உடல் உபாதைகள் இல்லை. சாதாரண வைரஸ் காய்ச்சலில் ஏற்படும் சோர்வு, அசதி, தொண்டை கரகரப்பு, காய்ச்சல் மட்டுமே உள்ளது. அதனால், மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்குக் கூட சென்றிருக்கலாம். ஆனால், நான் ஏன் என்னை பரிசோதனைக்கு உட்படுத்தினேன் என்றால் எனக்குள் இருக்கும் சமூகப் பொறுப்பு.

என் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதால், எனக்குப் பெரிய அளவில் தொந்தரவு ஏற்படவில்லை. ஒருவேளை நான் வார்டுக்குச் சென்றிருந்தால் மற்ற நோயாளிகளுக்கு அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

அதனால்தான் அரசாங்கமும் தொற்று அறிகுறி இருந்தால் தாமாகவே முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்த வலியுறுத்துகிறது. அதனால் அறிகுறி இருந்தால் அச்சப்படாதீர்கள். அரசு மருத்துவமனைக்கு உடனே செல்லுங்கள்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளீர்கள். எப்படி நேரம் கழிகிறது? மனச்சோர்வு ஏற்படவில்லையா?

கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த நோயாளிகளுக்கு நாங்கள் சிகிச்சை அளித்தபோது நிறைய பேர் மனச்சோர்வுடனேயே இருந்தனர். அவர்களிடம் சிகிச்சையின்போதே, "நீங்கள் எல்லோரும் கரோனா தொற்று உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு வந்துள்ளீர்கள். அதனால் நோயில் இருந்து முழுமையாக மீண்டுவிடுவீர்கள். நீங்கள் சிகிச்சைக்கு வந்துவிட்டதால் உங்களின் அன்புக்குரியவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்" என்று எடுத்துக் கூறினோம். அவர்களும் புரிந்து கொண்டனர்.

இப்போது அதே சூழ்நிலை எனக்கு வந்துள்ளது. எனக்கு நானே அதே சமாதானத்தைதான் சொல்லிக் கொள்கிறேன். அதனால் எனக்கு மனச்சோர்வு இல்லை. மேலும், என் நண்பர்கள், எனது சீனியர் மருத்துவர்கள் எனக்கு பக்கபலமாக உள்ளனர். அதேபோல் கரோனா தொற்று ஏற்பட்டவர்களிடம் அவர்களின் உறவுகளும், சுற்றத்தாரும் அன்பு காட்ட வேண்டும். ஒருவருக்கு கரோனா வந்துவிட்டால் அவர் எப்போதுமே தொற்றைப் பரப்புபவர் ஆகிவிட மாட்டார். சிகிச்சைக்குப் பின்னர் அவர் சாதாரண நபராகிவிடுவார். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சமூக மாற்றம் ஏற்பட்டால் நிறைய பேர் தாமாகவே முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்வார்கள்.

உணவு, உடற்பயிற்சி எல்லாம் எப்படி?

உணவைப் பொறுத்தவரையில் கரோனா நோயாளிகளுக்கு என பிரத்யேகமாக உணவு சமைக்கப்படுகிறது. இஞ்சி, எலுமிச்சைச் சாறு, கஷாயங்களும் தருகின்றனர். புரத உணவு வேண்டினால் முட்டை தருகின்றனர். அவர்களின் எல்லைக்கு உட்பட்டு என்னவெல்லாம் தர இயலுமோ அதை எல்லாம் தருகின்றனர்.

நான் கடந்த 10 ஆண்டுகளாகவே உடற்பயிற்சிக் கூடம் சென்று பயிற்சி மேற்கொள்வதால் தினமும் அறையில் அரை மணி நேரமாவது பயிற்சிகள் மேற்கொள்கிறேன்.

உடற்பயிற்சி மேற்கொள்வது மிக மிக அவசியம். உடல் அசைவுகள் இருக்கும் போதுதான் நுரையீரல் செயல்பாடு சிறப்பாக இருக்கும். நுரையீரல் செயல்பாடு சரியாக இருந்தால் கோவிட்-19 வைரஸால் நுரையீரலில் தாக்குதல் ஏற்படுவது குறையும். நுரையீரலில் இருந்து கிருமிகள் வாஷ் அவுட் ஆகும். அதனால், ஆரோக்கியமான உணவுடன் அன்றாட உடற்பயிற்சிகளையும் கைவிடாதீர்கள். நான் சிகிச்சையில் மருத்துவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். சிகிச்சையில் இருப்பவர்கள் அனைவருமே மருத்துவர்களுக்கு ஒத்துழப்பு தாருங்கள்.

என்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?

நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் நான் ஏசிம்ப்டமேட்டிக். அதனால், கரோனா நோயாளிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், அஸித்ரோமைசின் மற்றும் சில காய்ச்சல் மாத்திரைகள் கொடுக்கிறார்கள். இதுதவிர ஆரோக்கியமான உணவு, ஓய்வு, சரியான அளவில் உடற்பயிற்சி. சீக்கிரம் மீண்டுவிடுவேன் என நம்புகிறேன்.

இன்று 3-வது நாள். இன்னும் எத்தனை நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்?

இனி 10-வது நாளில் ஒரு மாதிரி எடுத்து சோதிப்பார்கள். அதன் பின்னர் மேலும் ஒருமுறை சோதனை செய்வார்கள். டிஸ்சார்ஜ் ஆன பின்னர் 15 நாட்கள் நான் வீட்டிலேயே கண்காணிப்பில் இருக்க வேண்டியிருக்கும். ஒரு மாத காலத்திற்குப் பின்னர் சாதாரணமாக பணிக்குத் திரும்பும் சூழல் ஏற்படும்.

கரோனா செய்திகளில் உங்களை கவலையடையச் செய்தி எது?

அண்மையில் கரோனாவால் இறந்த மருத்துவரின் உடலைத் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டம் ஒரு மருத்துவராக சக மனிதராக மிகுந்த வேதனையளித்தது. இதற்குக் காரணம் மக்களின் அறியாமை. கரோனா வந்துவிட்டாலே உயிர்போய்விடும் என்ற புரிதல் இல்லாமை. கரோனா வராமல் எப்படித் தவிர்க்கலாம், வந்துவிட்டால் தனிமையில் இருந்து மருத்துவத்துக்கு ஒத்துழைத்து எப்படித் தப்பிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே நான் ஊடகங்கள் வாயிலாகப் பேசுகிறேன். கரோனா குறித்து தவறான கருத்துகளைத் தவிருங்கள். அன்பை மட்டுமே பரப்புங்கள்.

பொதுமக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?

முதலில் அச்சப்படாதீர்கள். இரண்டாவதாக அறிகுறி இருந்தால் தயவுகூர்ந்து நீங்களே முன்வந்து அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள். நோய்த்தொற்று இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்திருந்தாலும் மருத்துவமனைக்கு நீங்களே செல்லுங்கள். கரோனாவில் இருந்து தப்பிக்க தனிமைப்படுத்திக் கொள்ளுதலே சிறந்த தீர்வு. அதனால், ஊரடங்கை மதியுங்கள். நாம் கரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் நம்மால் எவருடைய உயிரும் பறிபோய் விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். நேர்மறையான எண்ணம் இருந்தால் போதும் எளிதாக நோயை எதிர்கொள்ளலாம்.


தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

Post Top Ad