தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு தளர்வு இல்லை:மே 3ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும்- தமிழக அரசு அறிவிப்பு - Asiriyar.Net

Tuesday, April 21, 2020

தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு தளர்வு இல்லை:மே 3ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும்- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தளர்வுகள் எதுவுமில்லை, ஊரடங்கு வழக்கம்போல மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதலில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.


எனினும், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கை தளா்த்துவதற்கான சில விதிமுறைகளை மத்திய அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்டது. ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், விவசாயம் சாா்ந்த பணிகள், நெடுஞ்சாலை உணவகங்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்களுக்கு தளா்வு அளித்து இயங்க அனுமதிக்கலாம் எனத் தெரிவித்தது. மேலும் இதுகுறித்து மாநில அரசுகள் முடிவு செய்யவும் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து திங்கட்கிழமை அறிவிப்பார் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கென, தமிழக அரசு சாா்பில் அமைக்கப்பட்ட நிபுணா் குழு தங்களது அறிக்கையை இன்று முதல்வரிடம் சமர்பித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுபற்றி அறிவிப்பு விவரம்:

15.4.2020 அன்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில், 20.4.2020-க்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

தில்லி, கர்நாடகம், பஞ்சாப், தெலங்கானா, மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்கள், தற்போதுள்ள கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலினை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளன.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்வு செய்வது குறித்து ஆராய, 16.4.2020 அன்று ஒரு வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்து ஆணையிட்டு இருந்தது. அக்குழு, முதல் கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை முதல்வரிடம்  இன்று (20.4.2020) சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் ஆலோசனைகள் கவனமாக ஆராயப்பட்டன.இதன் அடிப்படையில், நோய்த் தொற்று மேலும் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள 3.5.2020ஆம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்துள்ளது.

அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதி விலக்கு தொடரும். நோய்த் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, நோய்த் தொற்று குறைந்தால், வல்லுநர் குழுவின் ஆலோசனையினை பெற்று, நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும் என்று அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad