கேரளாவில் கொரோனா நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில், அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதி மற்றும் மாநில முதல்வர்களின் பொது நிவாரண நிதி மூலம் நன்கொடை திரட்டப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சாமானியர்கள் என அனைத்து தரப்பினரும், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் கொரோனா நிவாரண பணிகளுக்காக அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சம்பளத்தை 5 தவணைகளாக, அதாவது ஒவ்வொரு மாதமும் 6 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பிடித்தம் செய்யப்பட்ட சம்பளம் அவர்களுக்கு திருப்பிச் செலுத்தப்படும்.
இது தொடர்பாக மாநில நிதித்துறை தாக்கல் செய்த திட்டத்தை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் பினராயி விஜயன் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதியதாரர்களுக்கு இந்த சம்பள பிடித்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சுகாதார ஊழியர்கள் இந்த பட்டியலில் இருந்து விடுவிக்கப்படுவார்களா? என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.
அரசின் இந்த முடிவை இடதுசாரி ஆதரவு சேவை அமைப்புகள் வரவேற்றுள்ளன. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
