இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததை அடுத்து இங்கு முதல்கட்டமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போதும் அனைத்து மாநிலங்களிலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இரண்டாம் கட்டமாக கடந்த 14-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட ஊரடங்கில் நாளை முதல் சில நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான வழிக்காட்டுதல்களையும் வெளியிட்டது.
மேலும் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள அதாவது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இந்தத் தளர்வு பொருந்தாது என்றும் ஏப்ரல் 20-க்கு மேல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விதிகளுக்குட்பட்டு அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய உத்தரவுகள் அமலுக்கு வரும் வரை தமிழகத்தில் தற்போது உள்ள அதே கட்டுப்பாடுகளே தொடரும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், '20-ம் தேதிக்குப் பிறகு எந்தெந்தத் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அறிக்கை
இதற்காக மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது. அந்த குழு முதல்கட்ட ஆய்வுகளை நடத்தி அதன் முடிவுகளை நாளை முதல்வரிடம் தெரிவிக்கவுள்ளது. இந்த குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து புதிய அறிவிப்புகளை முதல்வர் அறிவிப்பார். அதுவரை தற்போது உள்ள கட்டுப்பாடுகளே தொடர்ந்து நீடிக்கும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் பல மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பாக மாநில முதல்வர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.