அரசு உதவிபெறும் பள்ளிகளில் பகிரங்கமாக கட்டணம் வசூல் அதிகாரிகள் கவனிக்காததால் பெற்றோர், மாணவர் பரிதவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, July 24, 2019

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பகிரங்கமாக கட்டணம் வசூல் அதிகாரிகள் கவனிக்காததால் பெற்றோர், மாணவர் பரிதவிப்பு



அரசு உதவி பெறும் பள்ளிகளில், பகிரங்கமாக நடக்கும் கட்டண வசூலை, கல்வித்துறை அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், பெற்றோர், மாணவ, மாணவியர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில், பள்ளிகள் பற்றாக்குறையாக இருந்தபோது, தனியார் நிர்வாகத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு, அரசு உதவும் நோக்கில், உதவி பெறும் பள்ளிகள் உருவாகின. அப்பள்ளிகள், தனியார் நிர்வாகத்தில் செயல்பட்டாலும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்களின் சம்பளம், மாணவ, மாணவியர் பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட அனைத்தும், அரசே வழங்குகிறது. 


அரசு பள்ளியை போன்றே, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது. ஆனால், பெரும்பாலான உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டுக்கு, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, கட்டாயமாக கட்டணம் வசூலிக்கின்றனர். 

அதிலும், பல பள்ளிகள், தனியார் பள்ளிகளோடு போட்டி போட்டுக்கொண்டு, கட்டணத்தை அதிகரித்துச்செல்கின்றன. இதனால், மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர். 

வசூலிக்கப்படும் தொகைக்கு ரசீது கொடுக்கும் அளவுக்கு, பகிரங்கமாக நடக்கும் கட்டண கொள்ளையை, கல்வித்துறை அதிகாரிகள், கண்டும், காணாமல் இருப்பது, பெற்றோரிடையே, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது:

சேவை நோக்கில், கல்விக்கூடம் நடத்தும் நிர்வாகிகளுக்கு, ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட உதவிகளை, அரசு வழங்கியது. ஆனால், இன்று, தனியார் பள்ளிகளை போன்று, கட்டாயமாக கட்டணம் வசூலிக்கும் நிர்வாகத்துக்கு, ஆசிரியர்கள், சம்பளமாக மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை. 

தனியார் பள்ளிகளில் கட்டணம் கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை என எச்சரிக்கும் கல்வித்துறை அலுவலர்கள், உதவி பெறும் பள்ளிகளை கண்டுகொள்வதே இல்லை. அதிலும், பல பள்ளிகள், ஒரே வளாகத்தில் சுயநிதி பிரிவை தொடங்கி, அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்களையே, அதற்கும் பாடம் நடத்த பயன்படுத்துகின்றனர். இதிலும், அரசு நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. 

மேலும், ஆசிரியர் நியமனத்தின் போதும், பல லட்சம் ரூபாயை, பள்ளி நிர்வாகங்கள் கறந்துவிடுகின்றன. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் நிறைந்திருக்கும்போது, உதவி பெறும் பள்ளிகள் என, தனியார் நிர்வாகத்துக்கு, பல கோடி ரூபாயை தாரை வார்க்கும் முறை தேவைதானா என்பதை, யோசிக்க வேண்டும். 
இல்லையேல், அரசு பள்ளிகளை போன்று, கட்டணமில்லாமல், மாணவர்களுக்கு கல்வி வழங்க, உதவி பெறும் பள்ளிகளின் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.


இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கூறுகையில், ''அரசு பள்ளிகளை போன்றே, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், கட்டணம் வசூலிக்க கூடாது. இதுகுறித்து, புகார் எதுவும் பெறப்படவில்லை. இருப்பினும், பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும். ஆதாரத்துடன் புகார் கிடைத்தால், பள்ளி நிர்வாகம் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Post Top Ad