சில தினங்களுக்கு முன்பு (18-12-2018) AICTE மற்றும் UGC -இவைகளின் கூட்டமைப்பு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது.
அதில் "அரசு வேலைக்கு லாயக்கற்ற 33 முதுநிலை படிப்புகள்" என்ற வகையில் MCA., மற்றும் M.Sc., (Information Technology) உள்ளிட்ட முதுநிலை படிப்புகள் "M.Sc., (Computer Science)" -க்கு இணையானவை 'கிடையாது' என்றவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
சில வாரங்களுக்கு முன்பு "G.O Ms- 770" என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருந்தது. அதில் 814 கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் (PTA) உதவியுடன் நிரப்பிக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது (தற்போது இந்த அரசாணைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது)
.
தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக அறிவிக்கக்கோரி கணினி ஆசிரியர்கள் கோரிக்கைகள் விடுத்ததால் MCA உள்ளிட்ட 33 முதுநிலை பாடப்பிரிவுகள் அரசு வேலைக்கு லாயக்கற்றவை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மிகவும் கண்டணத்திற்குரியது
கணினி ஆசிரியர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் திசைதிருப்பும் வகையில் MCA., M.Sc., (IT) உள்ளிட்ட 33 முதுநிலைப் படிப்புகள் அரசு பணிகளைப் பெறுவதற்கு லாயக்கற்றவை என அறிவித்துள்ளார்கள்.
இதனை தடுத்து நிறுத்த 'தமிழக அரசு' எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது. இவர்களை நம்பி படித்த இலட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கு தமிழக அரசு தவறிவிட்டது.
மேலும், "M.Sc (Computer Science) மற்றும் M.Com.," உள்ளிட்ட இந்த பட்டப் படிப்புகளின் சேர்க்கையை 'அதிகரிக்கும்' நோக்கத்தில் MCA உள்ளிட்ட இந்த 33 பட்டங்களை அறிமுகம் செய்துவிட்டு... இந்த பாடப்பிரிவுகளை விட கல்வி கட்டணங்களை இரு மடங்காக வசூல் செய்துவிட்டு... தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் கொள்ளை 'லாபம்' பார்த்து விட்டு... இப்போது இப்படி ஒரு 'அடக்குமுறையான' அறிவிப்பை வெளியிட்டிருப்பது, இந்த 33 முதுநிலை படிப்புகளை முடித்த பட்டதாரிகளிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
இப்படி இருந்தால் இந்தியாவின் கல்வித்தரம் எப்படி மேன்மையடையும்?? சில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் முன்னணியில் உள்ள 100 பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில், இந்தியாவிலிருந்து ஒரு பல்கலைக்கழகம் கூட அந்த 'பட்டியலில்' இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
இந்த 33 முதுநிலை படிப்புகளும் எதற்கும் லாயக்கற்றவை என்பது 10 வருடங்களுக்கு முன்பே இவர்களுக்கு (UGC) தெரியாதா?? அப்போதே இதை அதிகாரப்பூர்வமாக கூறியிருந்தால் பல இலட்சம் இளைஞர்கள் தங்களுடைய நேரத்தையும், பணத்தையும் வீண் விரயம் செய்திருக்க மாட்டார்களே...
பல வருடங்கள் மெத்தனமாக இருந்துவிட்டு... இப்போது இந்த முதுநிலை படிப்புகளெல்லாம் 'செல்லாது' என கூறுவது ஏற்புடையதல்ல.
33 முதுநிலைப் படிப்புகள் அரசு பணிகளுக்கு லாயக்கற்றவை, செல்லாதவை என பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவித்திருப்பது மாணவர்களுக்கிடையே பெரும் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
அப்படியானால்...
MCA., மற்றும் M.Sc., (Information Technology) முடித்த பட்டதாரிகள் ஏற்கனவே TNPSC, UPSC, Railway, SSC, Etc. போன்ற மத்திய, மாநில அரசுகள் நடத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று "அரசு பணியில் உள்ளார்கள்." அவர்களையெல்லாம் இப்போது பணியிலிருந்து நீக்குவார்களா??
பல்கலைக்கழகங்கள் செய்த தவறுகளுக்கு மாணவர்களை பலி ஆடுகளாக்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?? எங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (UGC) பதில் கூற வேண்டும்.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர முடியாத மத்திய மாநில அரசுகளின் இயலாமையை கல்லூரி மாணவர்களின் மீது திணிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது இந்த முதுநிலை படிப்புகளை முடித்த & படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் & ஆசிரியர்களின் கனவுகளை நொறுக்கும் மனிதாபிமானமற்ற செயல். இந்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு வாபஸ் பெற வேண்டும்.
இன்றுவரையில், அரசு பள்ளிகளில் "கணினி அறிவியல்" பாடப்பிரிவை நிரந்தரமாக பயிற்றுவிக்க தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது பள்ளி கல்வித் துறையின் வளர்ச்சியை ஊனமாக்கும் செயல்.
அப்படி பார்க்கப்போனால், 6 முதல் 12 வகுப்புகளில் 'கணினி அறிவியல்' பாடத்தை ஏன் அறிமுகம் செய்து, அதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முயற்சிக்கிறது?? "அரசு பள்ளிகளின் கல்வித்தரம் CBSE -க்கு இணையான கல்வித்தரம்" என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறுவது குழப்பமான ஒரு அறிவிப்பாகவே உள்ளது.
இவ்வளவு காலங்கள் தாமதம் செய்து விட்டு இப்படி ஒரு சர்ச்சையான அறிவிப்பை வெளியிட்டிருக்கும் UGC & அதனைச் சார்ந்த கல்வி வாரியங்களும், பல்கலைக்கழகங்களும் தான் நிஜத்தில் லாயக்கற்றவை என எண்ணத்தோன்றுகிறது.
இந்த அறிவிப்பின் மூலம் M.Sc.,(Computer Science), MCA., மற்றும் M.Sc.,(Information Technology) உள்ளிட்ட பட்டதாரிகளுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடுகளையும், பாகுபாடுகளையும், மோதல்களையும் உருவாக்க AICTE & UGC உள்ளிட்ட அமைப்புகள் முயற்சி செய்கின்றன.
இந்த, விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மௌனம் காப்பது கணினி சார்ந்த முதுநிலைப் படிப்புகளை முடித்த பட்டதாரிகளுக்கிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
இத்தனை காலங்கள் அமைதியாக இருந்துவிட்டு திடீரென இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை 'மறு பரிசீலனை' செய்து இந்த கல்வியாண்டு (2018-19) வரை பயிலும் முதுநிலைப் பட்டதாரி மாணவர்களுக்கு இதிலிருந்து 'விலக்களிக்க' உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், சம்பத்தப்பட்ட கல்வி அலுவலகங்களிடம் ஒட்டுமொத்த MCA., & IT., பட்டதாரிகள் "அசல் சான்றிதழ்களை" ஒப்படைப்பதே இறுதி தீர்வாக இருக்கும். அரசு வேலைக்கு லாயக்கற்ற இந்த 'வெற்று பட்டங்கள்' இனிமேல் எதற்கு??
தவறும் பட்சத்தில் இந்த படிப்பிற்கான முழு செலவுகளையும் மீண்டும் எங்களுக்கு (படித்து முடித்த வருடத்திலிருந்து இன்றுவரையில்) "இழப்பீட்டுத் தொகையாக" வழங்கிட UGC உத்தரவிட வேண்டும்.
மேலும்,
இளநிலை & முதுநிலை பட்டங்களுக்கான பி.எட்., படிப்பின் கல்வித்தகுதியை நிர்ணயம் செய்து உரிய பணிவிதி மற்றும் பணி வரன்முறைகளை உருவாக்கி இவற்றை ஒரு நிரந்தரமான 'சட்டமாக' இயற்ற வேண்டும்.
அதனால், இந்த வாரத்திற்குள் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அதன் பல்கலைக்கழகங்கள் இந்த அறிவிப்பை வாபஸ் பெறாவிட்டால் இந்த 'ஈவு இரக்கமற்ற அறிவிப்பை' ரத்து செய்யக்கோரி சென்னை, மதுரை (உயர்நீதிமன்ற கிளை உள்ளிட்ட்) மற்றும் தமிழகமெங்கும் உள்ள நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் 'நஷ்ட ஈடு' கேட்டு விரைவில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம்.
கணினி ஆசிரியர்களின் நலன் கருதி...
*கு.ராஜ்குமார்,MCA., B.Ed., (Cell : 9698339298)*
(மாநில இணையதள ஆசிரியர்)
*தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் (TNBEDCSVIPS)*