Flipkart, Amazon அதிரடி சலுகைகளுக்கு முடிவு?- இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு - Asiriyar.Net

Friday, December 28, 2018

Flipkart, Amazon அதிரடி சலுகைகளுக்கு முடிவு?- இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு





வாடிக்கையாளர்களுக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் அளித்துவந்த அதிரடி சலுகைகளுக்கு முடிவுகட்டும் வகையில் மத்திய அரசு அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, ''ஃப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள், தாங்கள் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களின் பொருட்களை தங்களின் வலைதளங்களில் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தின் தளத்தில், ஒரே விற்பனையாளர் 25 சதவீதத்துக்கும் அதிகமான பொருட்களை விற்க முடியாது.


அத்துடன்  இ-காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனையாளர்களிடம், பொருட்களை தங்களின் தளத்தில் மட்டுமே எக்ஸ்க்ளூசிவ் ஆக விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. அதேபோல இந்நிறுவனங்கள் அனைத்து விற்பனையாளர்களுக்கும் எவ்விதப் பாகுபாடும் காட்டாமல், எல்லா சேவைகளையும் வழங்கவேண்டும்.


இ-காமர்ஸ் நிறுவனங்கள், அந்நிய நேரடி முதலீட்டு விதிகளைப் பின்பற்றியது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் ஆண்டறிக்கை அளிக்க வேண்டும். அத்துடன் சட்டபூர்வமான ஆடிட்டர் ஒருவரின் அறிக்கையும் இடம்பெற வேண்டும்.

இந்த விதிகள் அனைத்தும் ஆன்லைன் விற்பனையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் வணிகர்களின் நலனைப் பாதுக்காக்க உருவாக்கப்பட்டுள்ளன.


இந்த விதிமுறைகள் அனைத்தும் பிப்ரவரி 2019 முதல் அமலுக்கு வரும்'' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்குவது கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post Top Ad