இன்று நடக்க உள்ள பிளஸ் 2 அரையாண்டு தேர்வு வேதியியல் வினாத்தாள் ‘அவுட்’: அடுத்தடுத்து வெளியாவதால் பரபரப்பு - Asiriyar.Net

Saturday, December 22, 2018

இன்று நடக்க உள்ள பிளஸ் 2 அரையாண்டு தேர்வு வேதியியல் வினாத்தாள் ‘அவுட்’: அடுத்தடுத்து வெளியாவதால் பரபரப்பு



பிளஸ் 2 அரையாண்டு தேர்வில் இன்று நடக்க உள்ள வேதியியல் வினாத்தாள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாகும் சம்பவம் கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டுத்தேர்வு, கடந்த 12ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது.

இதில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்கள் தேர்வுகள் நடக்கும் முதல் நாளிலே வெளியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வாட்ஸ்அப் மூலம் இதுவரை பிளஸ் 2 உயிரியல், இயற்பியல், கணிதம் மற்றும் பிளஸ் 1 பொருளியல் வினாத்தாள்கள் வெளியாகியுள்ளன. 


இதேபோல் இன்று (டிச.22) நடக்கும் பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள் நேற்று வெளியானது. இதனை கொண்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். முதல்நாளிலேயே வினாத்தாள்கள் தொடர்ந்து வெளியாகி வருவது கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்வு விகிதம் குறைந்தால் அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பொறுப்பேற்க வேண்டும். இதனாலேயே வினாத்தாளை இப்படி ‘அவுட்’ செய்து தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 

இதனை தடுக்க இதுவரை கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன? அரையாண்டு தேர்வுகளுக்கு அந்தந்த கல்வி மாவட்டங்களில் மட்டுமே கேள்வித்தாள்கள் தயாராகும் என கூறப்படுவதால், இதை வெளியில் கசிய விட்டவர்களை கண்டுபிடிப்பது எளிது. எனவே குற்றவாளிகளை கண்டுபிடித்து வருங்காலங்களில் இதுபோல் நடக்காமல் தடுக்க வேண்டும்’’ என்றனர்.

Post Top Ad