தமிழகத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது என்னென்ன வழக்குகள் பதிவாகியுள்ளன? - Asiriyar.Net

Wednesday, November 7, 2018

தமிழகத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது என்னென்ன வழக்குகள் பதிவாகியுள்ளன?









தமிழகத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசை வெடித்ததாக 900-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான நடவடிக்கையாக தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் வெடி வெடிக்கலாம் என தமிழக அரசு நேரத்தை நிர்ணயித்து இருந்தது.


இந்த நேரத்தில் அல்லாமல் மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் குறிப்பிடப்பட்ட கால அளவை மீறி பட்டாசை வெடித்ததாக 900-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையில் 343 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் மயிலாப்பூரில் 40 பேர் மீதும், திநகரில் 25 பேர் மீதும், வண்ணாரப்பேட்டையில் 30 பேர் மீதும், பூக்கடையில் 28 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெல்லையில் 6பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு காவல்நிலையத்திலேயே ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

அதேபோல், சேலத்தில் 50 வழக்குகளும், காஞ்சிபுரத்தில் 63 வழக்குகளும், திருச்சியில் 32 பேர் மீதும், திண்டுக்கல்லில் 29 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 (தடையை மீறி செயல்படுதல்), பிரிவு 285 (அரசாணையை மீறி செயல்படுதல்) என இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Post Top Ad