'தோள் கொடுப்போம்' - டெல்டா பகுதி மக்களுக்கு ( சிறப்பு பதிவு ) - Asiriyar.Net

Tuesday, November 20, 2018

'தோள் கொடுப்போம்' - டெல்டா பகுதி மக்களுக்கு ( சிறப்பு பதிவு )


சென்னையில் வெள்ளம் வந்திருந்த போது நாட்டின் ஒட்டுமொத்த மீடியாவின் கவனத்தையும் நம் பக்கம் திரும்பச் செய்தது எது?


தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இருந்து உதவிசெய்ய ஓடிவந்த மக்களின் செயல் வெளிநாட்டில் இருந்தாலும் சமூகவலைதளங்கள் மூலம் குழுக்களை உருவாக்கி தங்கள் நண்பர்களை உறவினர்களை களத்தில் நிற்கவைத்த வெளிநாடு வாழ் நண்பர்களின் செயல்.





சென்னையில் வெள்ளம் வந்ததும் சொந்த ஊருக்கு ஓடிவிடாமல் எந்த ஊரில் பிறந்திருந்தால் என்ன சென்னை நம்ம ஊர் என்ற எண்ணத்தில் கடைசிவரை களத்தில் நின்ற மற்ற ஊர் இளைஞர்களின் செயல்.  சென்னை மக்களை அரவணைத்துக் காத்தது எல்லாம் சென்னையில் பிழைக்க வந்த மற்ற ஊர்க்காரர்களின் செயல்.


சினிமா உலகமும் அரசியல் உலகமும் சென்னை வெள்ளத்தில் களத்தில் இறங்கி நின்றதன் காரணம் அந்த செய்திகள் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள மீடியாவின் கவனத்தில் இருந்ததால். ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி நின்று மூழ்கிய சென்னையை தூக்கி நிறுத்தினர்.



ஆனால் இன்று கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த வேதாரண்யம், கோடியக்கரை, முத்துப்பேட்டை, ஜாம்பவானோடை, தம்பிக்கோட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மன்னார்குடி என பல ஊர்கள் மற்றும் அதன் அருகாமையில் உள்ள ஊர்கள் கஜா புயலினால் கிழித்து வீசப்பட்டுக் கிடக்கின்றது. நிலைமையின் தீவிரத்தை இவர்கள் உணரவில்லையா?
அல்லது உணர்ந்ததால் தான் இருட்டடிப்பு செய்கின்றார்களா? என தெரியவில்லை.


ஊரில் இருப்பவர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? சாப்பிட்டார்களா? இல்லையா? என்ன மாதிரி உதவிக்காக காத்திருக்கின்றார்கள் அவர்களின் தேவை என்ன? இப்படி எதையுமே வெளி உலகிற்குக் காட்ட மறுக்கின்றது ஊடகங்கள்.



ஊடகங்களால் உள் நுழைந்து செய்தி சேகரிக்க முடியவில்லையா அல்லது இந்த ஊர்களில் செய்தி சேகரித்து என்ன ஆகப் போகின்றது என்ற மெத்தனப் போக்கா?ஊடகங்களை விட்டு விடுங்கள்.
இந்த சமூகவலைதளங்களில்  சென்னை வெள்ளத்தின் போது கொதித்த பிரபலங்கள், மக்கள், இளைஞர்கள் என எவருமே இந்த கஜாப் புயலை கண்டும் காணாமல் இருப்பது என்ன? டெல்டா என்பது தான் தமிழ்நாட்டின் இதயம் போன்றது. இதயம் காயப்பட்டு துடித்துக் கொண்டிருக்கையில் கண்டும் காணாமல் இருப்பதன் பலன் உங்களைத் தான் சேரும்.
உதவுங்கள் என யாரும் கேட்கவில்லை. ஆனால் எவ்வித சேதமும் ஆகாதது போல் கண்டுகொள்ளாமல் இருக்காதீர்கள் என்று தான் சொல்கின்றோம்.




தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டத் தகுந்தது தான். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஆனால் வேதாரண்யம் தொடங்கி பட்டுக்கோட்டை வரை எதுவுமே நடக்காதது போன்ற பிம்பத்தை ஊடகங்கள் செய்வது ஏன்? இந்த ஊர்கள் எல்லாம் தமிழகத்திற்கு பயன்படாத ஊர்களா? அடப்பாவிகளா? எப்படி பார்த்தாலும் ஒரு காலத்தில் தமிழக அரசியலைக் கட்டுக்குள் வைத்திருந்தது டெல்டா மாவட்டங்கள் தான். இன்றைக்கு கேட்பாரற்றுக் கிடக்கும் நிலைமை எங்களுக்கு.


எத்துனை சேதத்தையும் சரி செய்து மீண்டுவருவதற்கான மன தைரியம் எங்களிடம் உள்ளது எங்களைத் தூக்கி நிறுத்த எம் மக்களும் எங்கள் இளைஞர்களும் இருக்கின்றார்கள். நாங்கள் எங்களை சரி செய்துகொள்கின்றோம். களப் பணிகளுக்கு குழுக்களாக தயாராகின்றோம். வெளிநாடு வாழ் டெல்டா வாசிகள் கைகோர்க்கவும்.

பதிவு
டெல்டா பகுதி பாதிக்கப்பட்ட மக்கள்!

Post Top Ad