"இந்தியா" எனும் பெயரை மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, May 30, 2020

"இந்தியா" எனும் பெயரை மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு






இந்திய அரசியலமைப்பில் திருத்தம் செய்து இந்தியா எனும் வார்த்தையை மாற்றி இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு வரும் ஜூன் 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இல்லாததால், அந்த மனு நேற்று பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. வரும் ஜூன் 2-ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.

மனுதாரர் மனுவில் தெரிவித்துள்ளதாவது:

“அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் தேசத்துக்கான இந்தியா எனும் பெயர் ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டது. இந்தியா என்ற பெயர் இன்னும் குறியீடாகவும், சொந்த மக்களுக்குப் பெருமையாகவும் இருக்கிறது.



ஆனால், இந்தியா எனும் பெயரை மாற்றி பாரத் என்று மாற்றும்போது சுதந்திரத்துக்காகப் போராடிய முன்னோர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, அவர்களின் போரட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக அமையும். ஆங்கிலேயர் ஆதிக்கத்தை நாம் கடந்துவிட்டோம் என்பதற்கு பாரத் அல்லது இந்துஸ்தான் என மாற்றுவது அவசியம்.

கடந்த 1948-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 1 வரைவு குறித்த விவாதம் நடந்தபோது பெரும்பாலானோர் இந்துஸ்தான், அல்லது பாரத் என பெயர் வைக்க வலுவான ஆதரவு இருந்துள்ளது.

எப்படியாகினும் இந்தியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதமாக நகரங்கள் பெயர் மாற்றம் செய்யப்படும்போது, நம் தேசத்தின் உண்மையான, அதிகாரபூர்வமான பெயரான பாரத் அல்லது இந்துஸ்தான் பெயரை அங்கீகரிக்கும் நேரம் வந்துவிட்டது.

ஆதலால், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து இந்தியா எனும் பெயரை இந்துஸ்தான் அல்லது பாரத் என்று மாற்ற மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும்”.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad