மாணவர்கள் செல்லும் பள்ளி வாகனத்தில் இப்போது, மாணவர்களின் புத்தகங்கள் அடங்கிய பைகள் மட்டும் சென்று வருகின்றன.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள், எப்போது திறக்கப்படும் என, தெரிய வில்லை.
பல பள்ளிகள் வரும் கல்வியாண்டுக்கான பாடங்களை, இப்போதே ஆன்லைனில் நடத்த துவங்கி விட்டன.கோவை சுந்தராபுரத்தில் உள்ள பிருந்தாவன் பப்ளிக் பள்ளி, சற்று வித்தியாசமாக, 'வாட்ஸ்ஆப்' வீடியோ மூலம் பாடங்களை நடத்துகிறது.
மாணவர்கள், வீட்டில் இருந்தபடி பாடங்களை படித்து எழுதுகின்றனர். இதில் என்ன வினோதம் என்றால், முந்தைய நாள் மாணவர்கள் வீட்டில் இருந்தபடி, எழுதும் நோட்டுகள் அடங்கிய புத்தக பை, பள்ளி வாகனங்களில், பள்ளிக்கு எடுத்து வரப்பட்டு, ஆசிரியர்களால் திருத்தப்படுகின்றன.திருத்தப்பட்ட நோட்டுகள், அன்று மாலை அதே வாகனத்தில், மீண்டும் மாணவர்களின் வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றன.
இது குறித்து, பள்ளி முதல்வர் வனிதா, ''வகுப்பு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை வீடியோ பதிவு செய்து, மாணர்வகளுக்கு 'வாட்ஸ்ஆப்பில்' அனுப்புகிறோம். அதில், எழுத வேண்டிய 'அசைன்மென்ட்' விபரங்களை கொடுத்து விடுகிறோம். மாணவர்கள் எழுதிய பாட நோட்டுகள், வாரத்தில் இருமுறை பள்ளிக்கு வேன்களில் எடுத்து வரப்படுகிறது.
திருத்தி மறுபடியும் மாணவர்களிடம் ஒப்படைக்கிறோம். மாணவர்களிடம் இருந்து புத்தகப்பைகளை வாங்கும் போதும், கொடுக்கும் போதும், கிருமி நாசினி தெளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதை மாணவர்களும், பெற்றோரும் வரவேற்றுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.