அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 - முழு பின்னணி விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, May 8, 2020

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 - முழு பின்னணி விவரம்







தமிழகத்தில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 58ல் இருந்து, 59 ஆக, ஓராண்டு நீட்டித்து, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக, நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளதால், நிலைமையை சமாளிக்க, அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.


தமிழகத்தில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, 58 ஆக உள்ளது. ஏற்கனவே, ஓய்வு வயது, 55 ஆக இருந்தது; 1979ல் அ.தி.மு.க., ஆட்சியில், 58 ஆக உயர்த்தப்பட்டது. அதன்பின், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது கொரோனா நோய் பரவல், அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.



அமல்



மாநிலத்தில், 40 நாட்களுக்கு மேலாக, ஊரடங்கு அமலில் உள்ளதால், அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

அதேநேரம், கொரோனா நோய் பரவல் தடுப்பு பணி, நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை, வாழ்வாதாரத்தை இழந்தோருக்கு நிவாரண உதவி அளிப்பது என, அரசுக்கு செலவு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு, சரண்டர் விடுப்பு போன்றவற்றை நிறுத்தி, அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், அரசின் அனைத்து துறைகளிலும், இந்த ஆண்டு ஏராளமானோர் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன் அளிக்க, அதிக நிதி தேவை. மேலும், தற்போதுள்ள சூழலில், புதிய ஆட்கள் தேர்வு எப்போது நடக்கும் என்றும் கூற முடியாத நிலை உள்ளது. எனவே, தமிழக அரசின் பணியாளர்கள், பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை, 58ல் இருந்து, 59 ஆக உயர்த்தி, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்டது. இந்த ஆணை, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையங்கள், கழகங்கள், சங்கங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாதம், 31ம் தேதி ஓய்வு பெறுவோர், மேலும் ஓராண்டு பணியில் இருப்பர்.

அதேபோன்று, ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பணியில் இருந்தால் அவர்களுக்கு கல்வியாண்டு முடியும் வரை அதாவது மே மாதம் வரை ஓய்வு வயது நீட்டிக்கப்படும். அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. கொரோனா பணி காரணமாக கடந்த 2 மாதங்களாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 2 மாதம் பணி  நீட்டிக்கப்பட்டது. அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா? என்று அரசு தெளிவாக கூறவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 55ஆக இருந்ததை 1979ம் ஆண்டு, மே மாதம் 58 ஆக அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் உயர்த்தி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அரசு வேலை வாய்ப்புக்காக 90 லட்சம் இளைஞர்கள் காத்திருப்பு

தமிழகம் முழுவதும் 89 லட்சத்து 90 ஆயிரத்து 800 இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை எதிர்க்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான காலி பணியிடங்களில் மாநிலம் முழுவதும் நிரந்தர பணியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக தொகுப்பூதியம், சிறப்பு முறை கால ஊதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையில் தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். மாநிலம் முழுவதும் 12 லட்சம் பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்கள் இந்த அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 6 லட்சம் நிரந்தர பணியிடங்களில் 4.50 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதை செய்யாமல் தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இந்தாண்டு ஓய்வு பெறவிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.

மகிழ்ச்சி:


இதனால், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன்பெறுவர் என, அரசு அறிவித்துள்ளது. அரசின் உத்தரவு, இந்த ஆண்டு ஓய்வு பெறவிருந்தோருக்கு, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டதால், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களின், பதவி உயர்வு பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

இது, பணியில் இருப்போருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், புதிய நபர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும் என்பதால், அரசு பணிக்காக காத்திருப்போரிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களும் இதை விமர்சித்துள்ளன.



ஆதரவா; எதிர்ப்பா?

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர், பி.கே.இளமாறன்: ஓய்வு வயதை உயர்த்தியது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சாதகமான விஷயம் தான். அகவிலைப்படியை ஒரு ஆண்டுக்கு ரத்து செய்ததால், ஓய்வூதிய குறைவை ஈடு செய்யலாம். ஆனால், பல லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் நிலை தான் நீடிக்கும். இது, இளைஞர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தும். ஓய்வு வயதை உயர்த்திய உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர், பேட்ரிக் ரைமண்ட்: அரசு அலுவலகங்களில் உள்ள ஊழியர் பணியிடங்களை, தமிழக அரசு ஏற்கனவே குறைத்துள்ளது. பணி நிரவல் என்ற அடிப்படையில், ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஓய்வுக்கு பிறகும் பணி நீட்டிப்பு உரிமை வழங்கியுள்ளது. ஓய்வு வயதை அதிகரிப்பது, லட்சக்கணக்கான படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும். இந்த முடிவு, நிர்வாகத்தில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர், சண்முகராஜன்: அரசு அறிவிப்பால், மகிழ்ச்சியும் இல்லை; வருத்தமும் இல்லை. ஓய்வு பெறும் வயதை உயர்த்திய அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வு, சரண் விடுப்பு நிறுத்த அரசாணைகளை, திரும்ப பெற வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை, அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால், மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர், அலுவலர் சங்க மாநில பொருளாளர், இளங்கோ: நீண்டகாலமாக பணியாற்றும், சில அரசு ஊழியர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்திருக்கலாம். மாறாக, ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்திருப்பது ஏற்புடையதல்ல.


தமிழ்நாடு சட்டசபை செயலக நிருபர்கள் சங்கம்: அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை, 58ல் இருந்து, 59 ஆக உயர்த்தி, அவர்கள் அகம் குளிரும் வகையில், முத்தானதொரு அரசாணையை வெளியிட்டதற்காக, முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி. இவ்வாறு பல்வேறு சங்கங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்மைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: இளைஞர்களின் வேலைவாய்ப்பை காத்திடும் வகையிலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பதவி உயர்வை பாதுகாக்கும் வகையிலும், ஓய்வு பெறும் வயதை, ஏற்கனவே உள்ளபடி, 58 வயதாக நிர்ணயம் செய்து, அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post Top Ad