நீங்கள் சுவாசிக்க நாங்கள் மூச்சை அடக்குகிறோம்!- ஒரு செவிலியரின் வலி தோய்ந்த பதிவு - Asiriyar.Net

Post Top Ad


Thursday, April 23, 2020

நீங்கள் சுவாசிக்க நாங்கள் மூச்சை அடக்குகிறோம்!- ஒரு செவிலியரின் வலி தோய்ந்த பதிவு


அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராகப் பணிபுரியும் ஒருவர் சமூக வலைதளத்தில் போட்ட பதிவு இது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் அல்லாட்டத்தையும், அவர்களின் உள்ளத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர்த்துகின்றன அந்தப் பதிவிலிருந்த உணர்ச்சிமிக்க வீரியமான வார்த்தைகள்.

'புறப்பட்டாகிவிட்டது, பணிக்கு. வாயிலில் வந்து கையசைத்து விடை கொடுக்கும் மனைவியையும், மகனையும் பார்க்கையில், எப்போதும்போல் இப்போது புன்சிரிப்புடன் கடக்க முயலவில்லை. எந்தவித நோய்த்தொற்றும் இல்லாமல் திரும்பி வரவேண்டும் என்ற கவலையோடு கூடிய பாரமொன்று மனதில் விழத்தான் செய்கிறது.
பணிக்குள் நுழைந்தபின் கையுறைகள், முகக் கவசம், மாற்று உடைகள் என அடையாளம் மாற்றப்பட்டு, ஆயிரம் மருத்துவப் பணியாளர்களுள் நாமும் ஒருவனாக அடையாளமின்றிப் போய்விடுவோம்.

எப்போது, எப்படி, எவரிடமிருந்து தொற்றும் என்பதை மட்டுமே நினைவில் வைத்து, அதற்கான தடுப்பு முறைகளோடு செயல்படுவதென்பது சாதாரண விஷயமல்ல.

அவசரத்தில் மறந்து போய்கூட, மூக்கிலோ, கண்களிலோ, முகத்திலோ, நமது கைகளை நாமே வைத்திடாமல் தவிர்ப்பது இயலாத விஷயம். ஒவ்வொரு நொடியிலும் கவனம் அவசியம். கரோனா தவிர, பிற நோய்கள் கொண்ட நோயாளிகளோடும், அதே கவனத்தோடு செயல்பட வேண்டியதும் அவசியம். நமக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்பதை விட, நம்மால் எவருக்கும் எந்த ஒரு தொற்றும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற சிரத்தைதான் இப்போதைக்கு முக்கியம்.

எல்லோரையும் போல் வீட்டிலிருக்க இயலாது இத்தருணத்தில். படைக்கப்பட்டதன் நோக்கமே போராடத்தான் என்றபின், மருத்துவப் பணியாளர்கள் போராடியே தீரவேண்டும். பணிக்குள் நுழைந்து, மூழ்கி, முடித்து வெளிவரும்வரை, வேறெதையுமே யோசிக்க முடியாத நிலைமைதான் எங்களுடையது. வெளியில் உள்ள எத்தனை பேருக்கு இது தெரியும் எனத் தெரியவில்லை.

அத்தனையும் தாண்டி, பணி முடியும் நேரமும் இங்கே நிரந்தரமில்லை. அவசியமெனில், அங்கேயே இருந்தாக வேண்டியதும் கட்டாயம். வீட்டிற்கு வந்தாலும், குடும்பத்தினரிடம் கூட ஓர் இடைவெளி விட்டே பேசவேண்டிய, பழகவேண்டிய சூழ்நிலை எத்தனை கொடுமையானது என்பதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. என்றாலும், மன நிறைவோடும், திருப்தியோடும், உற்சாகத்தோடும் செய்து கொண்டுதான் இருக்கிறோம் எமது பணிகளை, எங்களுக்காகவும், உங்களுக்காகவும், நம் தலைமுறைக்காகவும்.

தயவுசெய்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்க நினைக்கிறேன் என எண்ணி, அவசியமின்றி, வெளியில் வருவதை, சுற்றுவதை இப்போதாவது நிறுத்துங்கள். உங்களுக்காக மருத்துவப் பணியாளர்களும், காவலர்களும், தூய்மைப் பணியாளர்களும், தங்களைத் தாங்களே குடும்பத்திலிருந்து விலக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் சுகாதாரமாய் சுவாசிக்க, நாங்கள் மூச்சடக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள். நம் முன்னோர்கள் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை, நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல், நாம் தனித்திருந்து போராடி பெற்றுத் தரப்போகும் சுகாதாரத்தினை, நம் தலைமுறை அனுபவிக்கட்டும், நம்முடன் சேர்ந்து.

சிரமங்கள் சில இருக்கத்தான் செய்யும், பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த பூமி நமக்கானது. நாம் அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளும் நிறைய உண்டு.

அதில் முதல் கடமை என்பது தற்போது, வெளியில் வராமல் வீட்டிலிருப்பது மட்டுமே என்பதை உணர்ந்துகொள்ளுங்கள் என்று ஒரு மருத்துவப் பணியாளனாக உங்களை கேட்டுக்கொள்கிறேன்.'

வலிதோய்ந்த அவரின் வலைதளப் பதிவு, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

Recommend For You

Post Top Ad