தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை புதிய சட்டம்: தமிழக அரசிதழில் வெளியீடு: மெட்ரிகுலேஷன் இயக்குநரகத்துக்கு பெயர் மாற்றம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 20, 2019

தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை புதிய சட்டம்: தமிழக அரசிதழில் வெளியீடு: மெட்ரிகுலேஷன் இயக்குநரகத்துக்கு பெயர் மாற்றம்


தமிழக அரசு அமல்படுத்தியுள்ள தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் இனி தனியார் பள்ளிகள் இயக்குநரகம் என அழைக்கப்படும், மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்பதற்காக தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது ஆகியவை உள்பட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வகை தனியார் பள்ளிகளையும் வரன்முறைபடுத்தி, ஒரேவிதமான விதிமுறைகளின் கீழ் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம் 2018 ஜூலை 5-ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது. மேலும், அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் முதலே சட்டம் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டில் ஆசிரியர்கள்: புதிய சட்டத்தின்படி, சரியாக படிக்காத மாணவர்களை தனியார் பள்ளிகள் இனி பொதுத்தேர்வுகள் எழுதவிடாமல் தடுக்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தொல்லை தரக்கூடாது. பள்ளிகளில் மாணவர்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் பாடத்திட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அரசின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை நடத்தவும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் தனியார் பள்ளிகள் உள்கட்டமைப்பு வசதிகளை செய்துதர வேண்டும். தேர்வு மற்றும் விடைத்தாள் மதிப்பீடு பணிகளுக்காக தனியார் பள்ளி ஆசிரியர்களை மாற்றுப்பணிக்காக அனுப்ப வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி உள்ளிட்ட வேலைகளில் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பெற்றோர்- ஆசிரியர் சங்கம் அவசியம்: கல்வியாண்டின் மாணவர் சேர்க்கையை தொடங்கும் முன்பாக குறைந்தபட்சம் 30 நாள்கள் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். மேலும், சேர்க்கை குறித்த அறிவிப்பை பள்ளியின் அறிவிப்பு பலகையிலும், இணையதளத்திலும் வெளியிட வேண்டும். அரசுப் பள்ளிகளை போன்று, தனியார் பள்ளிகளிலும் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் அமைப்பது அவசியம். அரசு ஒப்புதல் பெறாமல் பள்ளிகளை மூடக்கூடாது. அவ்வாறு மூடும்போது படிக்கும் மாணவர்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
தனியார் பள்ளியை சேர்ந்த நிர்வாகக் குழு, தேவைப்படும் ஆசிரியர்களை பணியமர்த்திக் கொள்ளலாம். அவ்வாறு நியமனம் செய்யப்படும் பணியாளருடன் பள்ளி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துக் கொள்ள வேண்டும் ஆகியவை உள்பட தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தவிர நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என அனைத்து வித தனியார் பள்ளிகளும் மாணவர் சேர்க்கை, கட்டண நிர்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் ஒரேவிதமான நடைமுறையை இனி பின்பற்ற வேண்டும்.
தனியார் பள்ளி இயக்குநரகம்: மேலும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்தின் பெயரை தனியார் பள்ளிகள் இயக்குநரகமாக மாற்றப்பட உள்ளதாகவும், அதன்கீழ் அனைத்து வகை தனியார் பள்ளிகளும் கொண்டுவரப்பட்டு நிர்வகிக்கப்பட இருப்பதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post Top Ad